சுங்கை புலோ ஈரநில வனப்பகுதியில் அண்மையில் முதலையைக் கண்டதாக பார்வையாளர் ஒருவர் குறிப்பிட்டதற்கு தேசிய பூங்காக்கள் கழகம் (NParks) பதிலளித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 1) காலை வனப்பகுதியில் 7 முதலைகளைக் கண்டதாக ஸ்டோம்ப் வாசகர் ஜெரால்டு குறிப்பிட்டதுடன் வெயிலில் காய்ந்துகொண்டிருந்த முதலை ஒன்றைப் படம் பிடித்திருந்தார்.
முதலைகளுக்கும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு கருதி பூங்கா வாயிலில் அறிவிப்புப் பலகைகளை அதிகாரிகள் வைத்திருந்தால் நல்லது என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.
"எஸ்டுவாரின் ரக முதலைகள் சுங்கை புலோ ஈரநில வனப்பகுதியில் காணப்படுகின்றன. பார்வையாளர்கள் பயன்படுத்தாத சேற்றுப் பகுதிகளிலோ அல்லது நீரிலோ அவை காணப்படும்," என்று தேசிய பூங்காக்கள் கழக சுங்கை புலோ ஈரநில வனப்பகுதியின் இயக்குநர் திருவாட்டி யாங் ஷுஃபென் குறிப்பிட்டார்.
முதலைகள் அடிக்கடி காணப்படும் இடங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் பார்வையாளர்கள் அவற்றை மதித்து கவனமாக உலா வரும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
பார்வையாளர்கள் யாரேனும் அங்கு முதலைகளைக் கண்டால், அமைதியாக இருந்து அங்கிருந்து மெதுவாக அகல வேண்டும். முதலையை நெருங்கவோ, தொந்தரவு செய்யவோ, உணவு கொடுக்க முற்படவோ கூடாது. உதவி தேவைப்படுவோர் ஈரநில வனப்பகுதி தகவல் நிலையத்தை 67941401 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

