வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங் உட்பட அந்நாட்டின் முக்கியத் தலைவர்களுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்புகள் நம்பிக்கை தருகின்றன; எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் ஆழமான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான முயற்சியில் அவை முதற்படி மட்டுமே என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“இது மிகவும் அவசியமான முதற்படி. ஆனால், இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது,” என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன். செவ்வாய்க்கிழமையன்று தமது அமெரிக்கப் பயணத்தின் இறுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
வெள்ளிக்கிழமையன்று டாக்டர் பாலகிருஷ்ணன், திரு பிளிங்கனைச் சந்தித்தார். அன்றுதான் திரு பிளிங்கன் சீனாவுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
அங்கு திரு ஸி, சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரைத் திரு பிளிங்கன் சந்தித்தார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பேச்சுவார்த்தையாவது நடைபெறுகிறது என்பதை எண்ணி வாஷிங்டன் அதிகாரிகள் சிறிதளவு நம்பிக்கையுடன் இருப்பதை டாக்டர் பாலகிருஷ்ண்ன குறிப்பிட்டார். இத்தகைய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது முக்கியம் என்று அவர்கள் நம்புவதாக அவர் கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை இத்தகைய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது முக்கியம் என்று சீனாவும் நினைப்பது நம்பிக்கை தரும் ஒன்று. மேலும், பேச்சுவார்த்தை நடத்த ஓர் அடித்தளம் இருக்கிறது,” என்று திரு ஸிக்கும் திரு பிளிங்கனுக்கும் இடையிலான சந்திப்புப் பற்றி டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.