ஜூரோங் லேக் வட்டாரத்திற்கு எதிர்வரும் ஆண்டுகளில் சுமார் 1,700 புதிய வீடுகள், அலுவலக இடங்கள், பொழுதுபோக்கு வசதிகள் அனைத்தும் வரவுள்ளன.
இந்த வட்டாரத்திற்கான நீண்டகால உருமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 6.5 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி விற்பனைக்கு வருவதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்த நிலப்பகுதியில் மூன்று தனித்தனி நிலப்பகுதிகள் உள்ளடங்கும். ஜூரோங் லேக் வட்டாரத்தின் தெற்கில் புதியதொரு அக்கம்பக்கத்தின் உருவாக்கத்தை இந்த நில விற்பனை தொடங்கி வைக்கிறது.
கிட்டத்தட்ட 1,700 வீடுகளும் அலுவலக இடங்களும் நிலப்பகுதியில் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலர் பருவ மேம்பாட்டு நிலையம், பேரங்காடி, உணவு நிலையம் ஆகியவையும் இந்த முதல்கட்ட மேம்பாட்டின்கீழ் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் மேம்பாடுகள் படிப்படியாக நிறைவடையும்போது, நான்கு பெருவிரைவு ரயில் பாதைகளுடன் நிலப்பகுதி நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். வடக்கு-தெற்கு ரயில் பாதை, கிழக்கு-மேற்கு ரயில் பாதை, ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்கு ரயில் பாதை ஆகியன அவை.
நிலப்பகுதியின் மொத்த தரைப் பரப்பளவு 365,000 சதுர மீட்டர். குத்தகைக்காலம் 99 ஆண்டுகள்.
இதில் உள்ளடங்கியுள்ள மூன்று சிறிய நிலப்பகுதிகளில் ஒன்று ஜெண்டிங் ஜூரோங் ஹோட்டலுக்குப் பக்கத்தில் தற்போது காலியாக உள்ளது. இரண்டாவது நிலப்பகுதியில் இடைக்கால ஜூரோங் ஈஸ்ட் பேருந்து நிலையம் 2028 வரை செயல்படவிருக்கிறது. மூன்றாவது நிலப்பகுதி 2026 நடுப்பகுதி வரை ஜூரோங் வட்டார ரயில் பாதையின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும்.
ஒரே நில மேம்பாட்டாளர் மூன்று நிலப்பகுதிகளையும் மேம்படுத்தும்போது, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பணிகள் கட்டம் கட்டமாக நிறைவேறும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
நியமிக்கப்படும் நில மேம்பாட்டாளர் ஒட்டுமொத்த பணித்திட்டத்தையும் திட்டமிடுவார்.
சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்துள்ள இரண்டாவது பெருந்திட்ட நிலப்பகுதி இது. மரினா பே நிதி மையத்தில் அமைந்துள்ள 3.55 ஹெக்டர் பரப்பளவு கொண்ட முதல் நிலப்பகுதி 2005ல் விற்கப்பட்டது.