தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத பணம் அனுப்பும் சேவை: சிறை, அபராதம்

2 mins read
c344aa57-e36f-407b-83bc-d5f29b63054c
சிங்கப்பூரில் வேலை பார்த்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த பலரும் 2017ல் சன் டிண்ட்டை அணுகி தங்கள் நாட்டிற்குப் பணம் அனுப்ப உதவி நாடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெனின்சுலா பிளாசாவில் சட்டவிரோதமாகப் பணம் அனுப்பும் சேவையை நடத்திய சன் டிண்ட், 66, என்ற ஆடவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், $100,000 அபராதமும் அவர் கட்ட வேண்டும். உரிமம் பெறாமல் பணம் அனுப்பும் சேவையை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்பட்டபோது வேறு ஒரு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பெனின்சுலா பிளாசாவில் ஒரு சிறிய கடையில் செயல்பட்ட ஒரு வர்த்தக நிறுவனத்தின் இயக்குநரான அவர் மியன்மாருக்குப் பணம் அனுப்ப விரும்பியவர்களிடம் இருந்து மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட $30 மில்லியன் வசூலித்தார்.

சிங்கப்பூரரான சன் டிண்ட், பீர், கடலுணவுப் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்துவந்த மெசர்ஸ் இன்டர்நேஷனல் டிரேடிங் என்ற நிறுவனத்தின் பதிவுபெற்ற இயக்குநராக இருந்தார் என்பது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரிந்தது.

அவரின் மனைவியான திரி நாய்ன்க், மியன்மாரைச் சேர்ந்தவர். அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசியம் ஆவார். அந்த நிறுவனத்தின் நிர்வாகியாகவும் அந்த மாது இருந்தார்.

அந்த நிறுவனம் பெனின்சுலா பிளாசா முகப்பில் செயல்பட்டது. கணவர் கூறியதைக் கேட்டு அந்த மாது செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வேலை பார்த்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த பலரும் 2017ல் சன் டிண்ட்டை அணுகி தங்கள் நாட்டிற்குப் பணம் அனுப்ப உதவி நாடினர்.

முதலில் அவர்களில் சிலருக்கு இலவசமாக அந்தச் சேவையை அவர் வழங்கினார். பிறகு 2017 ஜூலையில் இருந்து பணம் அனுப்பும் சேவையை ஒரு நிறுவனம்போல் செய்ய அவர் முடிவு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

சேவைக் கட்டணமாக அவர் $87,200.64 பெற்றதாக மதிப்பிடப்படுகிறது. நாணயப் பரிவர்த்தனை வேறுபாடுகள் மூலம் அவர் $30,422.11 லாபம் ஈட்டியதாகவும் மதிப்பிடப்படுகிறது.

பெனின்சுலா பிளாசாவில் 2020 ஜூன் 28ஆம் தேதி காவல்துறை எடுத்த நடவடிக்கையின்போது லியோ இன்டர்நேஷனல் நிறுவனம் உரிமம் இன்றி பணம் அனுப்பும் சேவையை நடத்தி வந்தது தெரியவந்தது.

அந்த ஆடவரின் மனைவி மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். இருந்தாலும் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்