ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (சனிக்கிழமை பின்னிரவு) செம்பவாங்கில் உள்ள ஒரு வீவக வீட்டில் தீ மூண்டது. இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வெல்லிங்டன் சர்க்கிள் பகுதியில் உள்ள வீவக புளோக் 508Aல் இருக்கும் வீட்டில் தீ மூண்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தற்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது புளோக்கின் இரண்டாம் மாடியில் உள்ள ஒரு வீட்டிருந்து புகை வெளிவந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோக்கில் வசிக்கும் சுமார் 80 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மின்சைக்கிளின் மின்கலனிலிருந்து தீ மூண்டதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. வீட்டின் படுக்கையறையில் அந்த மின்கலனுக்கு மின்னூட்டப்பட்டுக்கொண்டிருந்தது.
2021ஆம் ஆண்டு மட்டுமே தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் சம்பந்தப்பட்ட 32 தீச்சம்பவங்கள் இடம்பெற்றன; 23 மின்சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட தீச்சம்பவங்கள் இடம்பெற்றன.
தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தீப்பிடித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுமாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.