ஒன்பதாவது மாதமாக சுருங்கிய முக்கிய ஏற்றுமதிகள்

2 mins read
526d4856-8ba3-4532-84a6-6253405c731c
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாகச் சுருங்கியுள்ளன. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு திங்கட்கிழமையன்று வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல் தெரிய வந்தது.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 15.5 விழுக்காடு குறைந்தன. மே மாதம் இந்த விகிதம் 14.8 விழுக்காடாகப் பதிவானது.

எனினும், ஜூன் மாதத்தில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 15.6 விழுக்காடு குறையும் என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் கணிக்கப்பட்டிருந்தது. அதைக் காட்டிலும் இறுதியில் பதிவான விகிதம் சற்று குறைவு.

பணவீக்கத்தைக் கருத்தில்கொள்ளும்போது எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் ஒன்பது விழுக்காடு குறைந்தன; மே மாதத்தில் பதிவான விகிதம் 7.8 விழுக்காடு என்று என்டர்பிரைஸ் எஸ்ஜி குறிப்பிட்டது.

மின்சாரம் சாரா ஏற்றுமதிகள் 15.4 விழுக்காடு சரிந்தன. மே மாதம் இந்த விகிதம் 10.7 விழுக்காடாக இருந்தது.

பெட்ரோல் ரசாயன ஏற்றுமதிகள் 34 விழுக்காடு சரிந்தன. முக்கிய ரசாயன ஏற்றுமதிகள் 61.8 விழுக்காடு கவிழ்ந்தன.

மருந்து ஏற்றுமதிகள் 29.5 விழுக்காடு சரிந்தன. இது, மே மாதம் பதிவான சரிவில் கிட்டத்தட்ட இரு மடங்கு.

மின்சாரப் பொருள் ஏற்றுமதிகள் சற்று மேம்பட்டன. ஜூன் மாதம் பதிவான விகிதம் 15.9 விழுக்காடு. மே மாதத்துக்கான விகிதம் 27.2 விழுக்காடாக இருந்தது.

சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்குத்தான் ஆக அதிகமான பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் 1.8 விழுக்காடு குறைந்தன. இந்த விகிதம், மே மாதம் பதிவான 4.8 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவு.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்குத்தான் ஆக அதிக பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரிலிருந்து 15.8 விழுக்காட்டு எண்ணெய் சாரா பொருள்கள் சீனாவுக்கு ஏற்றுமதியாயின.

குறிப்புச் சொற்கள்