2027ல் கரையோரப் பூங்காக்களில் சதுப்பு இடங்கள் அதிகரிப்பு

2027ல் கரையோரப் பூங்காக்களில் சதுப்பு இடங்கள் அதிகரிப்பு

2 mins read
f647aa5e-8050-4b44-bb38-8aefd13306a4
டிசம்பர் 2022ல் எடுக்கப்பட்ட படத்தில் கரையோரப் பூங்காக்களில் காணப்படும் சதுப்புநிலம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கரையோரப் பூங்காக்களில் அமைந்துள்ள ஈரநிலத்தில் மேலும் அதிகமான சதுப்புநில வகைகள் நடப்படவுள்ளன. கரியமிலவாயுவைச் செயல்திறத்துடன் சேகரிக்கவும் பல்லுயிர் சூழல் செழித்து வளரவும் இத்தகைய சதுப்பு இடங்கள் உதவுவதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து 2027ஆம் ஆண்டில் புதிய ‘பே கிழக்கு பூங்கா’ திறக்கப்படவுள்ளது.

ஆற்றங்கரைப் பகுதிகளின் சதுப்புநிலங்கள், பொதுவாக அவற்றின் வேர்களிலும் சுற்றிலும் உள்ள அவற்றின் படிவுகளிலும் கரியமிலவாயுவைச் சேகரிக்கும் செயல்திறன் கொண்டவை. இதனால் காற்று மண்டலத்திற்குள் பூமியை வெப்பமாக்கும் வாயு நுழைவதையும் அவை தடுக்கின்றன.

இத்தகைய காடுகள் மற்ற வெப்பமண்டலக் காடுகளுடன் ஒப்பிடுகையில் மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான கரியமிலவாயுவைத் திரட்டிச் சேகரிக்கின்றன.

இந்நிலையில் பே கிழக்குப் பூங்காவில் 5,148 சதுர மீட்டர் அளவில் அமையவுள்ள ஈரநில இடத்தில் சதுப்புநிலத்துக்கான நடும் இடத்தை இருமடங்காக்க உள்ளதாக கரையோரப் பூங்காக்கள் நேற்று அறிவித்தது.

இதன் தொடர்பில் நவம்பர் 2021ல் நடத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தில் ‘கிங்ஃபிஷர் வெட்லேண்ட்ஸ்’ பகுதியில் 200க்கும் மேற்பட்ட சதுப்புநில வகைகள் நடப்பட்டன. அழியும் அபாயத்தில் உள்ள வகைகளும் இவற்றில் அடங்கும்.

கரையோரப் பூங்காக்களின் ஈரநிலங்களில் உள்ள நன்னீர் சூழலில் எந்தெந்த சதுப்புநில வகைகள் நீடித்து உயிர்வாழ்கின்றன என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது.

உயிர்வாழும் விகிதம் ஒருசில வகைகளுக்கு இடையே மிக அதிகமாக இருந்தது.

2022ல் ஜனவரி முதல் டிசம்பர் வரை நடந்த ஓராண்டுகால கண்காணிப்பில் செடிகள் வளர்ந்து சதுப்புநிலங்களின் கரியமிலவாயு சேகரிப்பு ஆற்றலும் பெருகியிருந்தது தெரியவந்தது.

வியாழக்கிழமையன்று கரையோரப் பூங்காக்களில் நடைபெற்ற பொது விரிவுரை ஒன்றின்போது கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன. நிகழ்வில் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா கலந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்