தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2150ல் சிங்கப்பூரின் கடல்மட்டம் 1.37 மீட்டர் உயரும்

1 mins read
7376bc76-ab57-4771-b24d-7ab991d3062a
இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் 2150ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் கடல்மட்டம் 1.37 மீட்டர் உயரக்கூடும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘கிரீன்ஹவுஸ் கேஸ்’ எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவை அதிக அளவில் வெளியாவதால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் சிங்கப்பூரின் கடல்மட்டம் 2150ஆம் ஆண்டில் 1.37 மீட்டர் உயரும் என்று அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் புவி கண்காணிப்பகம் அந்த ஆய்வை மேற்கொண்டது.

2100ஆம் ஆண்டுக்கு அப்பால் கடல்மட்டம் உயர்வது தொடர்பான முன்னுரைப்புகளை விரிவுபடுத்துவது அந்த ஆய்வின் நோக்கம்.

ஆக அண்மைத் தகவல்களின் அடிப்படையில் உலகளாவிய நிலையில் கரியமில வாயு வெளியீடு குறித்த பதிவுகளைக் கருத்தில்கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நூற்றாண்டின் இறுதிவரை கரியமில வாயு வெளியேற்றம் இப்போதைய நிலையில் தொடர்ந்தாலுமேகூட, 2150ஆம் ஆண்டில் கடல்மட்டம் 0.95 மீட்டர் உயரும் எனத் தெரிகிறது.

“பருவநிலை மாற்றத்தின் நீண்டகாலத் தாக்கம், சிங்கப்பூரின் கடல்மட்ட உயர்வு ஆகிய அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகளும் ஆட்சியாளர்களும் விரிவான தகவல்களைப் பெற அண்மை ஆய்வு உதவுகிறது. மேம்பட்ட தணிப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன,” என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் கூறியது.

சிங்கப்பூர் நிலப்பரப்பில் 30 விழுக்காடு, சராசரி கடல்மட்டத்திலிருந்து 5 மீட்டருக்குக் குறைவான உயரத்திலேயே அமைந்துள்ளது. எனவே, தாழ்வான கரையோரப் பகுதிகளும் நில மீட்பினால் உருவான பகுதிகளும் அடிக்கடி மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்