தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஆர்டி ரயிலில் புகை; பயணிகள் வெளியேற்றம்

1 mins read
950423cd-2ab5-481c-87d9-2f067e32e651
சம்பவம் வியாழக்கிழமையன்று நிகழ்ந்தது. - படம்: SGFOLLOWSALL / இன்ஸ்டகிராம்

கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெருவிரைவு ரயிலுக்குள் (எம்ஆர்டி) வெள்ளைப் புகை சூழ்ந்தது. அதனால் அந்த ரயிலில் இருந்த பயணிகள் நகர மண்டபம் (சிட்டி ஹால்) நிலையத்தில் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமையன்று நிகழ்ந்தது. ரயிலின் குளிரூட்டி இயந்திரத்திலிருந்து ஏற்பட்ட குளிர்காற்றுக் கசிவால் இந்நிலை உருவானது. சம்பவம் நிகழ்ந்த ரயில் 1987ஆம் ஆண்டிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கும் முதன்முதலில் வெளியிடப்பட்ட பெருவிரைவு ரயில்களில் ஒன்று என எஸ்எம்ஆர்டி ட்ரெய்ன்ஸ் தலைவர் லாம் ஷியாவ் காய் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது சொன்னார்.

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 9.50 மணியளவில் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ரயில், சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது.

சம்பவத்தையடுத்து திரு லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் வெளியேற்றப்பட்டதாகவும் அடுத்த ரயிலில் ஏறிக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எந்த பயணிக்கும் மருத்துவ உதவி தேவைப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை என்பதையும் திரு லாம் குறிப்பிட்டார். சம்பவத்துக்குப் பிறகு ரயில் சேவைகள் இயல்பாகத் தொடர்ந்ததாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்