மொரோக்கோ நிலநடுக்கம்: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $68,000 உதவி

2 mins read
1945d62f-b85b-4b3a-af12-26610755e673
நிலநடுக்கத்தால் அழிந்துபோன வீடுகளின் இடிபாடுகள்வழி நடந்துசெல்லும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

மோசமான நிலநடுக்கத்துக்கு உள்ளான மொரோக்கோவில் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க 50,000 அமெரிக்க டாலர் (S$68,000) உதவி வழங்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உறுதியளித்துள்ளது. மொரோக்கோ செஞ்சிலுவைச் சங்கத்துக்குக் கைகொடுப்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.

வெள்ளிக்கிழமையன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மொரோக்கோவை உலுக்கியது. பிரபல சுற்றுலாத்தலமான மராக்கேஷ் நகருக்கு 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இப்பேரிடரில் 2,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களில சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிவாரணப் பணிகளுக்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் அரசாங்கமும் 50,000 அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும். சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இதைத் தெரிவித்தது.

இந்தத் துயரச் சம்பவத்துக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மொரோக்கோவின் வெளியுறவு அமைச்சர் நாசர் பவ்ரிட்டா உள்ளிட்டோருக்குக் கடிதம்வழி வருத்தம் தெரிவித்தார்.

“இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கடிதத்தில் எழுதியிருந்தார். “காயமடைந்தோர் விரைவில் குணமடைவர் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் சிங்கப்பூரர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது. இணையத்தில் பதிவுசெய்திருந்த சிங்கப்பூரர்களுக்கு இது பொருந்தும்.

நிலநடுக்கத்தால் சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்று அமைச்சு சொன்னது.

இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய தங்களின் நெருங்கிய குடும்பத்தாரை சிங்கப்பூரர்கள் அடையாளம் காண உதவும் ‘குடும்பத் தொடர்புகளை மீட்டெடுத்தல்’ (ரிஸ்டோரிங் ஃபேமிலி லிங்க்ஸ்) சேவையைச் செயல்படுத்தியிருப்பதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்