சிங்கப்பூரில் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்குச் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயம். அப்படியிருக்கையில் முகக்கவசம் அணியாமல் வரும் நோயாளிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்தவேண்டிய நிலை உருவெடுத்துள்ளது.
கூடுதலான மருந்தகங்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு நோயாளியும் சம்பந்தப்பட்ட மருந்தகத்திலிருந்து முகக்கவசம் பெற 10லிருந்து 50 காசு வரை கட்டணம் செலுத்தவேண்டும்.
உதாரணமாக, தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தில் (என்ஹெச்ஜி) உள்ள ஏழு பலதுறை மருந்தகங்களும் ஒரு முகக்கவசத்துக்கு 30 காசு கட்டணம் விதித்துள்ளன.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் வெளியே செல்லும்போது எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டிலிருந்து அந்த விதிமுறை கட்டங்கட்டமாகத் தளர்த்தப்பட்டது.
எனினும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், தாதிமை இல்லங்கள் போன்ற இடங்களில் இன்னமும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்து வருகிறது.

