புக்கிட் மேரா புதுப்பொலிவு பெற இருக்கிறது. அதன் நகர மையமும் சமூக இடங்களும் உருமாற இருக்கின்றன.
ரயில் வழித்தடம், தென்முகடு வட்டாரம் ஆகியவை போன்ற பசுமைப் பகுதிகளுக்கான இணைப்பு வசதிகள் மேம்பட இருக்கின்றன.
புக்கிட் மேராவில் வசிக்கும் கிட்டத்தட்ட 130,500 மக்கள் இந்தப் புதிய வசதிகளை எல்லாம் இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டு காலத்தில் எதிர்பார்க்கலாம்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ‘நம் நகர்ப்பகுதி மறுஉருவாக்கச் செயல்திட்டம்’ (ஆர்ஓஹெச்) என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த மேம்பாடுகள் இடம்பெற இருக்கின்றன.
இரண்டாவது தேசிய வளர்ச்சி அமைச்சர் இந்திராணி ராஜா இவற்றையும், புக்கிட் மேராவுக்கான இதர புதுப்பொலிவுத் திட்டங்களையும் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
வீவகவின் ஆர்ஓஹெச் செயல்திட்டத்தின் கீழ் வரும் நான்காவது கட்ட நகர்களாக புக்கிட் மேராவும் அங் மோ கியோ, குவீன்ஸ்டவுன், சுவா சூ காங் ஆகியவையும் புதுப்பொலிவு பெறும் என்று 2020ல் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங் அந்தச் செயல்திட்டம் பற்றி 2007ல் முதன்முதலாக அறிவித்தார். சமூகத்தில் மாறி வரும் தேவைகளை நிறைவேற்றவும் அதேவேளையில், வீவக நகர்ப் பகுதிகளை அவற்றுக்கே உரிய தனித்தன்மைகளுடன் கட்டிக்காக்கவும் பழைய குடியிருப்புப் பேட்டைகள் புதுப்பொலிவு பெறும் என்று அப்போது பிரதமர் அறிவித்து இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
வீவக 2020 முதல் 2022 வரை குடியிருப்பாளர்களையும் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் உள்ளடக்கி ஆய்வுகளை நடத்தி, குழு விவாதங்களை நடத்தி பல்வேறு கருத்துகளையும் திரட்டி அவற்றைக் கொண்டு புதுப்பிப்புத் திட்டங்களைத் தீட்டி இருக்கிறது.
அந்த நான்கு நகர்களையும் சேர்ந்த சுமார் 1,700 குடிமக்களும் சமூக உறுப்பினர்களும் அந்தக் கலந்துரையாடல்களில் பங்கெடுத்துக்கொண்டனர்.
புக்கிட் மேராவுக்கான ஆகப் புதிய திட்டங்களில் ரெட்ஹில், தியோங் பாரு, தெலுக் பிளாங்கா, மவுண்ட் ஃபேபர் ஆகிய குடியிருப்புப் பேட்டைகளும் தஞ்சோங் பகாரின் ஒரு பகுதியும் உள்ளடங்கும் என்று கழகம் தெரிவித்து இருக்கிறது.
புக்கிட் மேரா நகர மையத்தின் கவர்ச்சி அம்சங்கள் மேம்படும். அங்கு பொருள்களை வாங்குவது குடியிருப்பாளர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்.
ருபிகோன் கட்டடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் இப்போதைய கூரையுடன் கூடிய அரங்கத்திற்குப் பதிலாக புதிய, பெரிய கூரையுடன் கூடிய நிகழ்ச்சி அரங்கம் உருவாகும்.
அந்த நகர மையத்தில் உள்ள நடையர் உலாச்சாலைகள் மேம்படுத்தப்படும். புதிய விளையாட்டுப் பகுதிகள் உருவாக்கப்படும்.
ரெட்ஹில் குளோசில் புதிய நடையர் சைக்கிளோட்டப் பாதைகள், கூரையுடன் கூடிய இணைப்பு வழிகள் உருவாகும்.
புக்கிட் மேராவில் இப்போது உள்ள ஆறு அக்கம்பக்கங்களின் பொது இடங்கள் மேலும் பல வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும்.
புக்கிட் மேராவில் வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்டவர்களுக்கு வயது 60க்கும் மேல். ஆகையால், புதுப்பிப்புத் திட்டங்கள் அவர்களை மையமாகக் கொண்டு இடம்பெறும்.
முதியோருக்கு வசதியாக புதிய ஏற்பாடுகள் இருக்கும். அந்த நகர மையத்தில் உள்ள பொது இடங்கள், அக்கம்பக்கங்கள், குடியிருப்புப் பேட்டைகள் எல்லாம் கூரையுடன் கூடிய நடைபாதைகளுடன், வழுக்காத தரைகளுடன் அதிக இருக்கைப் பகுதிகளுடன் மக்களுக்கு அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும்.
முதுமையிலும் இளமையுடன் திகழ்வதற்கான வசதிகள் புக்கிட் மேராவில் உள்ள பல்வேறு பூங்காக்களிலும் ஏற்படுத்தப்படும்.
புக்கிட் மேரா சென்ட்ரலில் புளோக் 119ல் இருக்கும் பல அடுக்கு கார்ப்பேட்டைக்குப் பக்கத்தில் ஒரு புதிய பூங்கா உருவாகும்.
அதன் மூலம் மக்கள் அந்த நகர மன்றத்தில் இருந்து ரயில் வழித்தடத்திற்குச் செல்லலாம்.
ஹெண்டர்சன் ரோட்டில் இருக்கும் நடையர் பாதைகள் மேம்படுத்தப்படும். தெலுக் பிளாங்கா ஹில் பூங்காவிலும் மவுண்ட் ஃபேபர் பூங்காவிலும் உடலுறுதி வசதிகள் மேம்படும்.
அலெக்சாண்டிரா ஹில் பூங்கா, புக்கிட் பெர்மாய் பூங்கா போன்ற அக்கம்பக்க பூங்காக்கள் மேலும் பசுமை பெறும்.
பல தலைமுறை வசதிகள் இருக்கும். கூரையுடன் கூடிய காட்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.
புக்கிட் மேராவின் வரலாற்றை அந்த நகரத்தோடு இணைப்பதற்கான வழிகளை ஆராய்வதும் கழகத்தின் நோக்கமாக இருக்கிறது.
புக்கிட் மேரா நகரைச் சுற்றிலும் உள்ள பாரம்பரிய அம்சங்களில் சிலவற்றைத் தலைசிறந்த முறையில் எப்படி வடிவமைக்கலாம் என்பது பற்றிய கருத்துகளைக் கழகம் குடிமக்களிடம் இருந்து பெற விரும்புகிறது.
ஆர்ஓஹெச் திட்டங்கள் புக்கிட் மேரா நகர மையத்தில் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 24 வரை காட்சிக்கு இடம்பெறும். பிறகு அது இதர பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும்.
அந்தக் கண்காட்சிகளைப் பார்த்து குடியிருப்பாளர்கள் வீவகவின் (InfoWEB) இணையத்தளத்தில் கருத்துகள், யோசனைகளைத் தெரிவிக்கலாம்.