தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளி ஒளிக்கோலம் பூண்டது லிட்டில் இந்தியா

2 mins read
1be619ab-541c-4cf9-8cc0-16c02b37d59f
ஒளிசிந்தும் தீபாவளித் தோரணங்கள் லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சுற்றுப்பயணிகள் செல்ல விரும்பும் இடமாக லிட்டில் இந்தியா திகழ்கிறது என்றும் லிட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பங்காளித்துவ அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிராங்கூன் சாலை அருகே பிர்ச் சாலையில் திறந்தவெளியில், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கத்தின் (லிஷா) ஏற்பாட்டில் சனிக்கிழமை மாலை நடந்தேறிய தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

நிதி அமைச்சருமான திரு வோங், தீபாவளிக் கொண்டாட்ட உணர்வுகள் லிட்டில் இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று சொன்னார். 

பிற இனத்தவரின் பண்டிகைகளையும் பாரம்பரியத்தையும் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவதன் மூலம் பல்லின சமுதாயமான சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பறைசாற்ற முடியும் என்றும் அதுவே சிங்கப்பூரின் தனித்துவம் என்றும் திரு வோங் கூறினார்.

தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவோர் ஒழுக்கம், பணிவு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட வாழ்வியல் நெறிமுறைகளை வெளிப்படுத்துகின்றனர் என்றார் அவர். 

தீபாவளி கொண்டாட்ட உணர்வைத் தூண்டுவதுடன் தேவை உடையோருக்கு உதவிக்கரம் நீட்டும் தருணமாகவும் அமைகிறது என்றும் திரு வோங் கூறினார்.

இவ்வாண்டு ஒளியூட்டின் கருப்பொருளான ‘ராதா-கிருஷ்ணா’வை முன்னிட்டு சிராங்கூன் சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் மொத்தம் 45 ஒளிச்சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயர் டெனிஸ் புவா, புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, சிங்கப்பூருக்கான இந்திய, இலங்கைத் தூதர்கள் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும் பொதுமக்களும் ஒளியூட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஓர் அங்கமாக, ‘சிங்கா ரங்கோலி’ குழுவின் ஏற்பாட்டில் தீபாவளி ரங்கோலி திட்டத்தின்கீழ் சிறப்புத் தேவையுடையோர், மனநலக் கழகத்தை சேர்ந்தோர், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ரங்கோலி காட்சிக்கு வைக்கப்பட்டது. அதைப் பார்வையிட்ட திரு வோங் அதில் தாமும் வண்ணம் தீட்டி மகிழ்ந்தார்.

மேலும் இந்நிகழ்வில் இந்து அறக்கட்டளை வாரியம், இந்துக் கோவில்கள், லிஷா ஆகியவை இணைந்து ‘அதிபர் சவால் நிதிக்காக’ $88,501 பெறுமானமுள்ள காசோலையை திரு வோங் முன்னிலையில் வழங்கின.

லிஷா தலைவர் ரகுநாத் சிவா, “இவ்வாண்டு 64 நாள்களுக்கு தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லிட்டில் இந்தியா யானை உருவிலான உருவப் பொம்மையான ‘தேக்கா ராஜா’, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

“ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகளின் வருகையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று தெரிவித்தார். 

தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகள் பற்றிய விவரங்களை https://www.deepavali.sg இணையப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். 

monolisa@sph.com.sg

குறிப்புச் சொற்கள்