வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதன்கிழமை எட்டு கட்டுமானத் திட்டங்களில் இடம்பெறும் 6,800 பிடிஓ அடுக்குமாடி வீடுகளை விற்பனைக்குவிட்டது. அந்த வீடுகள் சுவா சூ காங், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெங்கா ஆகிய பகுதிகளில் கட்டப்படும்.
காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன் ஆகிய இடங்களில் கட்டப்படும் இரண்டு திட்ட வீடுகள் பிரதான இட பொது வீடுகளாகும் (பிஎல்எச்).
இவற்றை வாங்குவதற்கும் விற்பதற்கும் கடும் நிபந்தனைகள் உண்டு. இந்த வீடுகளை மறுவிற்பனை செய்யும்போது 6% மானியத்தைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.
இவை தவிர இதர ஆறு திட்ட வீடுகளுக்கு நான்காண்டுகள் அல்லது அதற்குக் குறைவான காலம் காத்திருந்தால் போதும் என்று கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த வீட்டு விற்பனையுடன் புதிய விதிமுறைகள் நடப்புக்கு வருகின்றன. பிடிஓ வீடுகளுக்கும் முந்தைய விற்பனைகளில் எஞ்சி இருக்கின்ற வீடுகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் வரிசை எண்ணைப் பெற்றுவிடும் பட்சத்தில் அவர்கள் பின்னர் இடம்பெறக்கூடிய விற்பனைகளில் வீடுகளுக்கு விண்ணப்பிக்க இயலாது.
கிடைக்கும் வீடுகளை விட மூன்று மடங்கு அதிகமாக வரிசை எண்களை கழகம் கொடுக்கிறது.
வீட்டைப் பார்த்து தேர்ந்து எடுத்துக்கொள்ளும் போது பலரும் வேண்டாம் என்று போய்விடலாம் என்று கழகம் இவ்வாறு செய்கிறது.
இப்போது விதிகள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி அக்டோபரில் இடம்பெறக்கூடிய வீடுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த வீடு விற்பனைத் திட்ட காலத்தில் வரிசை எண்ணை பெற்றுவிடும் பட்சத்தில் அவர்கள் டிசம்பர் மாத விற்பனையில் வீடு கேட்டு விண்ணப்பிக்க இயலாது என்று கழகம் விளக்கியது.
அதோடு மட்டுமன்றி, அழைப்பு வரும்போது சென்று பிடிஓ வீட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாதவர்களின் இப்போதைய விண்ணப்பம் பிறகு வரக்கூடிய வீடுகளின் விற்பனைக்குப் பயன்படாத வகையில் ரத்து செய்யப்பட்டுவிடும்.
அதாவது அக்டோபர், டிசம்பர் விற்பனைகள் இரண்டிற்கும் விண்ணப்பிக்கக்கூடியவர்கள் அக்டோபர் விற்பனையின்போது வீட்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அழைக்கப்பட்டு அவர்கள் வீட்டை முன்பதிவு செய்துகொள்ளவில்லை என்றால் அவர்களின் டிசம்பர் மனு ரத்து செய்யப்பட்டுவிடும்.
இத்தகைய மனுதாரர்கள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய வீடுகளுக்குத் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். இருந்தாலும் முன்னதாக அறிவிக்கப்பட்டு உள்ள கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் அவ்வாறு செய்ய முடியும்.
அதாவது முதன்முறையாக விண்ணப்பிப்போர், அழைப்பு வரும்போது பிடிஓ வீட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை என்றால் இரண்டாவது முறையாக விண்ணப்பிப்பவர்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள்.
ஓராண்டு காலத்தில் இடம்பெறக்கூடிய அடுத்தடுத்த விண்ணப்பங்களில் அவர்களுக்கு முன்பைவிட குறைந்த குலுக்குச்சீட்டு வாய்ப்புகளே கிடைக்கும்.
விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள 10 அல்லது அதற்கும் குறைவான பிடிஓ வீடுகளே இருக்கையில், இந்தப் புதிய விதியை கழகம் அகற்றிவிடும்.
இப்போது விற்பனைக்கு விடப்படும் புதிய வீடுகள் கணிசமான அளவுக்கு விலைத் தள்ளுபடிகளைக் கொண்டிருக்கின்றன. ஆகையால், மறுவிற்பனை வீடுகளுடன் ஒப்பிடுகையில் இவை மலிவானவை என்ற கருதப்படுகிறது.
பிஎல்எச் திட்டத்தின்படி, குவீன்ஸ்டவுனில் தங்ளின் ஹால்ட் கஸ்கேடியாவில் மொத்தம் 973 மூவறை, நான்கறை வீடுகள் கட்டப்படும். மூவறை வீட்டின் விலை மானியமின்றி $364,000 முதல் $509,000 வரை இருக்கும். நாலறை வீட்டின் விலை $537,000 முதல் $702,000 வரை இருக்கும்.
காலாங்கில் கட்டப்படும் இரண்டாவது பிஎல்எச் திட்டத்தில் 1,143 வீடுகள் கட்டப்படும். இவற்றில் ஈரறை நீக்குப்போக்கு வீடுகள், மூவறை, நான்கறை வீடுகள் அடங்கி இருக்கும்.
இந்த ஆண்டின் இறுதி விற்பனை டிசம்பரில் இடம்பெறும். பிடோக், பீஷான், புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் வெஸ்ட், குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ் ஆகியவற்றில் ஏறத்தாழ 6,000 வீடுகளை வாங்கிக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
எஞ்சிய வீடுகளின் அடுத்த விற்பனை டிசம்பரில் நடக்கவிருந்தது. ஆனால், அது அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படும் என்று கழகம் தெரிவித்துள்ளது.