‘திறந்த மனப்பான்மையுடன் இருந்தபடி இறையாண்மையை மதித்து ஒன்றுபட்டு நடவடிக்கை எடுங்கள்’

2 mins read
a2c58554-3559-4020-bea0-d20e9f663aa4
ஏஷியா ஃபியூச்சர் சமிட் 2023 மாநாட்டில் பேசிய திரு டியோ சீ ஹியன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குழப்பமான நிலையற்ற உலகச் சூழலில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க சிங்கப்பூர், சொந்த அக்கறைகளுக்காக மட்டுமின்றி எல்லா நாடுகளின் இறையாண்மையையும் எல்லை சார்ந்த நெறிகளையும் மதித்து நடப்பது, உலகளாவிய பிரச்சினைகளை ஒன்றாகக் கையாள்வது, திறந்த மனப்பான்மையையும் பல தரப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பதை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டே இயங்குவதாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.

இந்தப் புதிய உலகச் சூழலில் சிங்கப்பூரின் உத்திகளும் தீர்வுகளும் மாறலாம்; ஆனால் அவற்றுக்குப் பின்னால் உள்ள கொள்கைகள் மாறாது என்றார் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ.

ஏஷியா ஃபியூச்சர் சமிட் 2023 எனும் ஆசிய கண்டத்துக்கான வருங்காலம் தொடர்பான மாநாட்டில் திரு டியோ பேசினார்.

“திறந்த மனப்பான்மை, அனைவரையும் உள்ளடக்குவது, பிறருக்கு உதவி அதன் மூலம் தங்களின் அக்கறைகளைக் கவனித்துக்கொள்வது ஆகிய முயற்சிகளில் உலகை ஈடுபட வைக்க உதவ மனிதவளம், திறன், பொருள் வளம், அனைத்துலகத் தொடர்புகள் ஆகியவை சிங்கப்பூரிடம் இப்போது முன்பைவிட அதிகமாக உள்ளன. இது நமது நன்மைக்காகவும், வட்டார, உலக நன்மைக்குமானது,” என்று மாநாட்டின் தொடக்க உரையில் திரு டியோ குறிப்பிட்டார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ், பிஸ்னஸ் டைம்ஸ் ஆகியவை முதன்முறையாக இணைந்து செயல்படுகின்றன. அதைக் கௌரவிக்கும் வகையில் ஏஷியா ஃபியூச்சர் சமிட் 2023 மாநாடு அமைகிறது. இந்த மாநாடு, ரிட்ஸ்-கார்ல்ட்டன் ஹோட்டலில் புதன்கிழமையன்றும் வியாழக்கிழமையன்றும் நடைபெறுகிறது.

20க்கும் மேற்பட்ட சிங்கப்பூர், அனைத்துலகப் பேச்சாளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட் உள்ளிட்டோர் அவர்களில் சிலர்.

அரசாங்க, தனியார் துறைகள் போன்றவற்றைச் சேர்ந்த சுமார் 300 பேராளர்களும் பங்கேற்கின்றனர்.

இவ்வாண்டு, சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த திரு லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் ஆண்டு. அதனைத் தொடர்ந்து திரு லீயின் உலகக் கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்