சட்டவிரோதப்பண விவகாரம்: நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவுள்ள ரெய்ன்போ நிலையம்

2 mins read
5f7fc2a3-83d2-458e-ad76-67b9a203920a
சிறப்புத் தேவையுடையோருக்கான மூன்று பள்ளிகளை நடத்தும் ரெய்ன்போ நிலையம். - கோப்புப் படம்: சாவ்பாவ்

கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரத்தில் சிக்கியுள்ள 10 சந்தேக நபர்களில் மூவர் தங்களுக்கு 72,450 வெள்ளி வழங்கியதாக ரெய்ன்போ நிலையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தங்களின் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யப்போவதாக அந்நிலையம் கூறியுள்ளது.

சிறப்புத் தேவையுடையோருக்கான மூன்று பள்ளிகளை நடத்தும் ரெய்ன்போ நிலையம் தனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு சொன்னது.

கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்குவதில் ஈடுபட்டதாக நம்பப்படும் சிலரிடமிருந்து அறநிறுவனங்கள் நன்கொடை பெற்றதாக சண்டே டைம்சில் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர்களிடமிருந்து குறைந்தது 52,000 வெள்ளியை ரெய்ன்போ நிலையம் பெற்றதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.

ரெய்ன்போ நிலையம் ஆண்டுதோறும் வெளியிடும் அறிக்கையிலிருந்து அந்தத் தகவல் பெறப்பட்டது. அது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டபோது அந்நிலையம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

2.8 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரத்தில் சிக்கிய சந்தேக நபர்களின் பெயர்கள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தங்களுக்குள் விசாரணை நடத்தியதாகவும் தாங்கள் பெற்ற நன்கொடை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டதாகவும் ரெய்ன்போ நிலையம் தெரிவித்தது. அறநிறுவன ஆணையாளரின் அதிகாரபூர்வ ஆலோசனை அறிக்கைக்காக நிலையம் காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களான வாங் ஷுய்மிங், சூ ஹாய்ஜின், சாங் ரூய்ஜின் ஆகியோரிடமிருந்து 2020லிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரெய்ன்போ நிலையம் நன்கொடை பெற்றிருக்கிறது.

சட்டங்களை நன்கு கருத்தில்கொண்டு செயல்படுவதாகவும் கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்குவதைத் தவிர்ப்பதற்கான சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் இணங்கத் தாங்கள் நடந்துகொள்வதாகவும் நிலையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்