சிங்கப்பூரர்கள் முடிந்தவரை எஞ்சியிருக்கும் பயண முறைகள் வாயிலாக மிக விரைவில் இஸ்ரேலிலிருந்து வெளியேறுமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டது. இஸ்ரேலில் வாழும் அல்லது அங்கு பயணம் மேற்கொண்டுவரும் சிங்கப்பூரர்களுக்கு இது பொருந்தும்.
அதேவேளை, இஸ்ரேலைவிட்டு வெளியேற விரும்பாத சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறும் உள்ளூர் நடப்பு விவகாரங்களைக் கண்காணிக்குமாறும் அமைச்சு அறிவுறுத்துகிறது. ஓல்ட் சிட்டி, கிழக்கு ஜெருசலம் போன்ற பெரிய அளவில் கூட்டம் சேரும் இடங்களைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஓர் ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. காஸா பகுதி, மேற்குக் கரை மற்றும் லெபனான், சிரியா, காஸா பகுதி ஆகியவற்றுடனான இஸ்ரேலிய எல்லைப் பகுதிகள் ஆகியவற்றுக்குப் பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறு அந்த ஆலோசனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அவசியம் இல்லாவிட்டால் இஸ்ரேலுக்குச் செல்வதை அறவே தவிர்க்குமாறும் வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூரர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது.
முழுமையான பயண, மருத்துவக் காப்புறுதித் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது போன்ற தனிப்பட்டப் பாதுகாப்பு சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் அமைச்சு கேட்டுக்கொண்டது.