தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பார்வைக் குறைபாடு உள்ளோருக்கான புதிய எஸ்பிஎஸ் டிரான்சிட் செயலி

1 mins read
9579a2ee-b7dd-4900-9d2e-cc479b6aa1d8
பார்வைக் குறைபாடு இருப்போர் நடமாட உதவுவதற்கான ஏற்பாடு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பார்வைக் குறைபாடு உள்ளோருக்குப் பேருந்து முனையங்கள், பெருவிரைவு ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் நடமாட உதவ புதிய செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

‘வேமேப்-எஸ்ஜி’ என்ற அந்தச் செயலியை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் பிரிட்டனைச் சேர்ந்த வேமேப் நிறுவனமும் செவ்வாய்க்கிழமையன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கின. செயலியைப் பயன்படுத்த கட்டணம் கிடையாது.

ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட் ஆகிய இரண்டு தளங்களிலிருந்தும் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

எனினும், தற்போதைக்கு டௌன்டவுன் பாதையில் இருக்கும் தெம்பனிஸ் பேருந்து முனையம், தெம்பனிஸ் பெருவிரைவு ரயில் நிலையம் ஆகியவற்றில் மட்டும் ‘வேமேப்-எஸ்ஜி’ செயலியைப் பயன்படுத்த முடியும். அவை இரண்டும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின்கீழ் உள்ளவை.

செயலியை முதலில் தெம்பனிசில் தொடங்கத் திட்டமிடப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி சிம் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்குள் தனக்குக்கீழ் உள்ள பேருந்து முனையங்கள், பெருவிரைவு ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றுக்கும் செயலியைச் செயல்படுத்த எஸ்பிஎஸ் டிரான்சிட், நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் அணுக்கமாகப் பணியாற்றுவதாக திரு சிம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்