சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் (எஸ்ஐடி) முன்னாள் மாணவர்கள் இலவசமாகப் பாடம் பயில வகைசெய்யப்பட்டுள்ளது.
பெரியவர்கள் கல்வி கற்பதில் பல்கலைக்கழகங்கள் கூடுதல் பங்கு வகிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இந்நடவடிக்கையும் அம்முயற்சியில் அடங்கும்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் முன்னாள் மாணவர்கள், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஒரு தொடர் கல்வி பாடம் ஒன்றுக்கும் பயிற்சிப் பாடம் ஒன்றுக்கும் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். பொதுவாக அத்தகைய பாடம் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் சுமார் 3,500 வெள்ளியாக இருக்கும்.
விண்ணப்பம் செய்ய முன்னாள் மாணவர்கள் தங்களின் பட்டக் கல்விச் சான்றிதழ்களை உள்ளிட்டவற்றை மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஏற்கெனவே சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டக் கல்வி பயில விண்ணப்பிக்கும்போதே தேவையான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்பது அதற்குக் காரணம்.
சிங்கப்பூரில் உள்ள இதர சில கல்வி நிலையங்களும் அண்மை ஆண்டுகளில் முன்னாள் மாணவர்களுக்கான இத்தகைய திட்டங்களை தொடங்கியிருக்கின்றன.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுமார் 18,000 முன்னாள் மாணவர்கள் அங்கு கல்வி பயின்றவர்கள்.