சிங்கப்பூரின் மூத்த கவிஞர்களில் ஒருவரான வே.முல்லைவாணன் காலமானார். அவருக்கு வயது 81. தமிழகத்தின் திருமுல்லைவாசலில் செவ்வாய்க்கிழமை காலை முதுமையால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், இசைப்பாடல்கள் என ஏராளமாக எழுதியிருக்கும் திரு முல்லைவாணன், உலகுதாசன், மலர் அண்ணன், கதிரவன், சோழநடன் என பல்வேறு புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
இலவச வெளியீடான ‘அறிவு’ இருமொழி இதழின் சிறப்பாசிரியராக இருந்த திரு முல்லைவாணன், அதனை மூன்றாண்டுகளாக நடத்திவந்தார்.
தஞ்சை மாவட்டம், கீழக்கரையில் 1942ஆம் ஆண்டு பிறந்த அவர், 16வது வயதில் சிங்கப்பூருக்கு வந்தார்.கடல்துறை, துறைமுக ஆணையத்தில் நீண்ட காலம் பணியாற்றிய அவர், 1980களின் இறுதியில் தமிழகத்துக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது. அங்கு சென்ற பின்னர் எழுத்துப் பணியுடன் பதிப்பகமும் நடத்தி வந்தார். தனித்தமிழ் ஆர்வலரான கவிஞர், கலியபெருமாள் என்ற தமது பெயரை முல்லைவாணன் என மாற்றிக்கொண்டார். தேவநேய பாவாணர் போன்ற தனித்தமிழ் கொள்கையாளர்களைப் பின்பற்றியவர்.
“மிக நல்ல மனிதர், பழகுவதற்கு இனிமையானவர்,” என்று அவரைப் பற்றிக் குறிப்பிட்ட எழுத்தாளர் பொன் சுந்தரராசு, 1971ல் அவரது ‘தமிழருவி’ என்ற தனித்தமிழ் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டபோது, அதனை மாணவர்கள் வாங்கும்படி ஊக்குவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
‘வீணை, கரும்பு, ஊஞ்சல்’ என்ற சிறார் பாடல்களை 1980களில் திரு முல்லைவாணன் வெளியிட்டார். 1983ல் வெளிவந்த ‘வட்டமும் சதுரமும்’, 1997ல் வெளிவந்த ‘திருக்குறள் தெளிபொருள் பொழிப்புரை’ ஆகிய இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
மாதவி இலக்கிய மன்றத்தின் முன்னாள் செயலாளர், தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முன்னாள் துணைச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் திரு முல்லைவாணன். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தில் 1977 முதல் 1979 வரை துணைத்தலைவராகவும் பின் 1981 முதல் 1987 வரை தலைவராகவும் அவர் செயலாற்றினார்.
திரு முல்லைவாணனின் தமிழ்ப்பணிக்காகப் பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். 1962ல் திருக்குறள் ஆய்வுக்கட்டுரைக்கு தங்கப் பதக்கம் பெற்றார். 2007ல் தமிழக அரசின் தமிழறிஞர் பட்டம் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரு முல்லைவாணனுக்கு மகனும் இரு மகள்களும் உள்ளனர்.

