வசதிகுறைந்த 7,000 தென்கிழக்கு வட்டாரவாசிகளுக்கு அரை மில்லியன் வெள்ளை, கைக்குத்தல் அரிசிக் கிண்ணங்கள், 50,000 ஓட்ஸ் கிண்ணங்கள் வழங்கும் இலக்கோடு திரும்பியுள்ளது ‘தென்கிழக்கு ஃபேர்பிரைஸ் அரிசிக்கான நடை’.
தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி), ‘என்டியுசி ஃபேர்பிரைஸ்’ அறக்கட்டளை இணைந்து 15வது ஆண்டாக ஏற்பாடு செய்யும் இந்நடையின் தொடக்க நிகழ்ச்சி, சனிக்கிழமை (அக்டோபர் 21) நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் புற்றுநோய் சங்க உறுப்பினர்கள் உட்பட, கிட்டத்தட்ட 2,000 பேர் பங்குபெற்றனர்.
அரிசித் திரட்டு, அக்டோபர் 21 முதல் டிசம்பர் 31 வரை நீடிக்கும். இந்த பத்து வாரங்களில் மக்கள் நடக்கும், ஓடும் ஒவ்வொரு 300 மீட்டருக்கும் ‘ஃபேர்பிரைஸ்’, வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் - ஒவ்வொன்றிலும் ஒரு கிண்ணம் தென்கிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் வசதிகுறைந்தோருக்கு நன்கொடையளிக்கும்.
இத்தனை ஆண்டுகளில் இந்நடைமூலம் கிட்டத்தட்ட 100,000 வசதிகுறைந்த தென்கிழக்குவாசிகளுக்கு 7.5 மில்லியன் கிண்ணங்களுக்கும் மேற்பட்ட அளவு அரிசி வழங்கப்பட்டுள்ளது.
விபத்தினால் வேலைசெய்ய இயலாத திரு ராஜேந்திரன், 59, இத்திட்டத்தின்மூலம் பயனடையும் ஒருவர். மாதந்தோறும் அரிசி கிடைப்பது தன் மனபாரத்தைக் குறைப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் நடந்து, ஓடி தென்கிழக்கு வட்டார மக்களுக்கு அரிசி திரட்ட உதவலாம். கடந்த தூரத்தைப் பதிவிட : https://go.gov.sg/wfr2023

