பெய்ஜிங்: ராணுவத் தலைவர்களுக்கு இடையேயான தொடர்பின் முக்கியத்துவத்தை தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் வலியுறுத்தியுள்ளார். அடுத்த பத்தாண்டுகளில் ஆசியாவில் நேரடி மோதலைத் தவிர்ப்பதே அவர்களின் மிக முக்கியமான பணி என்று அவர் குறிப்பிட்டார்.
10வது பெய்ஜிங் ஷியாங்ஷான் கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய டாக்டர் இங், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நடந்து வரும் போர்களை எடுத்துக்காட்டாகச் சுட்டினார். தவறான புரிதல்களையும் தவறான முடிவுகளால் ஏற்படும் விபரீத முடிவுகளையும் தவிர்க்க ராணுவ அமைப்புகளுக்கிடையேயான தொடர்பு முக்கியமானது என்றார் அவர்.
ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் ஒரே நேரத்தில் நடக்கும் மோதல்கள் உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
“காரணம் எதுவாக இருந்தாலும் சரி, ஆசியாவில் மோதல் ஏற்பட்டால், அது பேரழிவை ஏற்படுத்தும். அதைத் தவிர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்,” என்று அவர் கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடம் கூறினார்.
சிங்கப்பூரின் ஷங்ரிலா கலந்துரையாடல் போன்று ஷியாங்ஷான் கருத்தரங்கு ஓர் உச்சநிலை தற்காப்பு மாநாடு ஆகும். இதில் தற்காப்புத்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
உக்ரேன் போருடன் மற்ற நாடுகளில் சமய அடிப்படையிலான பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருக்கும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியப் போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே போர் நடக்கும் நிலையில் டாக்டர் இங்கின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி 2022 ஆகஸ்டில் தைவானுக்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா உயர்மட்ட ராணுவத் தலைவர்கள் ஓராண்டுக்கும் மேலாக சந்திப்பு நடத்தாத நிலையில், அமைச்சர் இங் ராணுவத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
‘ஆசிய-பசிபிக் தற்காப்புக் கட்டமைப்பு: நிகழ்காலமும் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற அமர்வில் பேசிய டாக்டர் இங், அவசர அழைப்பு எண்கள் போன்ற வெளிப்படையான தொடர்புக்கான வழிகள், குறிப்பாக நெருக்கடியான தருணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரும் சீனாவும் 2023 ஜூன் மாதம் பாதுகாப்பான தற்காப்பு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் சீனாவும் இதேபோன்ற இருதரப்பு தற்காப்பு தொலைபேசி இணைப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த இணைப்பைத் திறம்படப் பயன்படுத்துவதற்கான ஏற்பாட்டை இருதரப்பும் கண்டறியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புவிசார் அரசியல் செல்வாக்கில் அமெரிக்காவும் சீனாவும் உலகின் பாதிப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் என்ற “ஜி-2” சூழல் கற்பனையாக இருந்தாலும், அந்த இரு வல்லரசுகளில் ஒன்று வீழ்ச்சியடைந்தாலும் உலகம் சிறப்பாக இருக்காது என்று அமைச்சர் இங் கூறினார்.
பதற்றமான அமெரிக்க-சீனா உறவு மெல்ல தணிந்து வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இது நவம்பரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சநிலை மாநாட்டில் திரு பைடனுக்கும் ஸி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்புக்கு வழி வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த வட்டாரத்திலும் உலக அளவிலும் நிலைத்தன்மையை மேம்படுத்த சீனா இன்னும் அதிகம் பங்காற்ற முடியும் என்றார் டாக்டர் இங்.
சீனா பொருளியல் ரீதியாக தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும், அதன் சந்தைகளை உலகின் மற்ற பகுதிகளுடன் மேலும் ஒருங்கிணைக்க வேண்டும் என அவர் கூறினார்.
சீனா தொடர்ந்து பலதரப்பு ஒத்தழைப்பை ஊக்குவிப்பதுடன் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சீனாவின் வளர்ச்சி பெரிய, சிறிய நாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதற்கும் அனைவரையும் உயர்த்தும் என்பதற்கும் இது மிகப்பெரிய உத்தரவாதமாகும் என்றார் டாக்டர் இங்.
மேலும், சீனா அதன் ராணுவம் உட்பட, இவ்வட்டாரத்தில் பதற்றங்களைக் குறைக்க முன்னிலையில் செயல்பட வேண்டும். “சீனா ஒத்துக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், அது ஏற்கெனவே ஒரு மேலாதிக்க சக்தியாக பார்க்கப்படுகிறது. எனவே அது ஒரு நல்ல சக்தியாக செயல்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
டாக்டர் இங் சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ஜெனரல் ஹீ வெய்டாங்கை செவ்வாய்க்கிழமை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

