மக்கள் தொகை மூப்படைந்து வரும் சிங்கப்பூரில் கட்டுப்படியான கட்டணம், உயர் தரம், அனைவரும் பெறக்கூடியதாக சுகாதார சேவை

அமைச்சர் ஓங்: சிறப்பான சுகாதாரப் பராமரிப்புக்கு மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டம்

4 mins read
de6b5ffb-ac1f-46a6-aa8b-407bad374c9f
15வது சிங்கப்பூர் பொருளியல் கொள்கை கருத்தரங்கில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்கள் நலமான வாழ்க்கையை வாழ உதவும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டம், மக்கள் தொகை மூப்படைந்து வரும் சிங்கப்பூர் சுகாதார சேவையை கட்டுப்படியான கட்டணத்திலும், உயர் தரத்திலும், அனைவரும் பெறக்கூடிய வகையிலும் வைத்திருக்க சிறந்த தேர்வு என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

15வது சிங்கப்பூர் பொருளியல் கொள்கை கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

சிங்கப்பூர் பொருளியல் மன்றம், தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வோகோ ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

எனினும், மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்துக்கு ஆண்டுக்கு 400 மில்லியன் வெள்ளி வரை நிதியளிக்கப்படுகிறது. ஆனால், ஆயுட்காலத்துக்கும் நலமான வாழ்வுக் காலத்துக்குமான இடைவெளி குறைவாக இருக்கும் ‘நீல மண்டலம் 3.0’ நிலையை அடைவதற்கு போதுமானதாக இது இருக்காது.

உலகெங்கிலும் அதிக ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும் இடங்களான நீல மண்டலங்களின் பட்டியலில் சிங்கப்பூர் சேர்க்கப்பட்ட பின்னர், அமைச்சர் ஓங் உருவாக்கிய வார்த்தை இது.

“முறையான வாழ்க்கை முறைகள் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே காப்பீட்டு சந்தாக்களை வேறுபடுத்துவது போன்ற பிற வழிகளை அரசாங்கம் யோசித்து வருகிறது. உப்பின் அளவைக் குறைக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது,” என்று அமைச்சர் கூறினார்.

‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல்திட்டம் எனப்படும் மற்றொரு தேசிய திட்டத்தில் சிங்கப்பூர் முதலீடு செய்கிறது. இது முதியோருக்கு சமூக வட்டங்களை உருவாக்கவும் சமூகத்தில் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வாழவும் உதவுகிறது.

சுகாதாரப் பொருளியலில் அதிகமான பொருளியல் வல்லுநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு விரும்புகிறது. தேவைக்கேற்ப வளங்களை ஒதுக்குவது, பணம் செலுத்துபவர்கள், சேவை வழங்குநர்கள், நோயாளிகளிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது அல்லது நடத்தை பொருளியலைப் பயன்படுத்தி மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வலியுறுத்துவது என்றார் திரு ஓங்.

அதற்காக, பொருளியல் அலுவலகம் ஒன்றை அமைக்க அமைச்சு யோசித்து வருகிறது என்றார் அவர்.

சுகாதாரப் பாதுகாப்பின் முக்கியப் பொருளியல் கொள்கைகளைப் பற்றி விவரித்த அமைச்சர் ஓங், அரசாங்க மானியம், காப்பீடு, கொடைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளைச் சார்ந்திருப்பது முக்கிய அம்சங்களில் ஒன்று என்றார்.

மற்றொன்று, மருத்துவத் தொழில்நுட்பத்தை எதிரானதாக ஆக்கக்கூடாது. மின்னிலக்க சுகாதாரப் பராமரிப்பு போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வருமுன் காப்பதையும் முழுமையான பராமரிப்பையும் எளிதான, செலவு குறைந்த முறையில் பெற உதவுகின்றன.

புதிய மருந்துகளும் சிகிச்சைகளும் சில நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் விலை மிக அதிகமாக உள்ளன.

இந்த சிகிச்சைகளுக்கு மானியம் வழங்குவது செலவாகும். இந்தப் பணத்தை கல்வி, பொதுப் போக்குவரத்து, பூங்காக்கள் அல்லது தற்காப்பு போன்றவற்றுக்குச் செலவிடலாம்.

சிங்கப்பூரின் சராசரி ஆயுட்காலமும், ஆரோக்கியமான வாழ்க்கைக் காலமும் உலகிலேயே மிக அதிகமாகும்.

எனினும், ஒவ்வோர் ஆண்டும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே சுகாதாரத்துக்கு செலவிட்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளின் சராசரி செலவில் பாதிக்கும் குறைவானது என்று திரு ஓங் கூறினார்.

சுகாதாரக் கட்டமைப்பு புதிய யதார்த்தங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். சுகாதாரச் செலவுகள் ஒட்டுமொத்த சமுதாயத்தால் ஏற்கப்பட வேண்டும். மேலும் இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது சுகாதாரக் கட்டமைப்பின் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படும் என்றார் அமைச்சர்.

சுகாதாரப் பராமரிப்பில் எவ்வளவு அரசாங்கத்தில் நிதியளிக்கப்படுகிறது என்பதற்கு இரு வேறு எடுத்துக்காட்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன் இரு நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்புகள் பற்றி விளக்கினார்.

பிரிட்டனில் சுகாதாரச் செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது எல்லாருக்கும் சமமானது என்றபோதிலும், சிகிச்சைக்கு ஏழு மில்லியன் நோயாளிகள் காத்திருப்பது, ஊதியப் பற்றாக்குறையால் சுகாதாரத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, அதிகரித்து வரும் அரசாங்கத்தின் சுகாதார செலவுகள் என்று பல பிரச்சினைகள் உள்ளன.

இங்கிலாந்தில் எந்தவொரு அரசாங்கமும் இலவச சுகாதாரக் கொள்கையிலிருந்து மாறாது. என்றாலும், தனியார் காப்புறுதியை வாங்கக்கூடியவர்கள் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்த்து தனியார் மருத்துவமனையில் உடனடி சிகிச்சையைப் பெறலாம்.

அமெரிக்காவில், தனியார் காப்புறுதி சுகாதார நிதியுதவியின் முக்கிய அம்சம். இதில், அதிக தொகை செலுத்துபவர்கள் சிறந்த சேவையைப் பெறலாம்.

அமெரிக்காவில், ஒபாமா நிர்வாகம் கட்டுப்படியாகக்கூடிய சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்திற்கு அழுத்தம் கொடுத்தது. இன்று, நாட்டின் மருத்துவச் செலவுகளில் பாதி அரசாங்கத்திடம் இருந்து வருவதால், காப்பீட்டை நம்பியிருக்க வேண்டியதில்லை.

“தொடக்கம் எதுவாக இருந்தாலும், பெரும்பாலான நாடுகள் இறுதியில் வெவ்வேறு நிதியளிப்பு முறைகளை இணைக்கின்றன,” என்று திரு ஓங் கூறினார்.

சுகாதாரச் செலவுகளை சமூக மயமாக்குவதில் மானியங்கள், காப்புறுதியின் சாதக பாதகங்களை சிங்கப்பூர் எப்போதும் அங்கீகரித்து வருகிறது.

மானியங்கள், மெடிசேவ், மெடிஷீல்டு லைஃப் ஆகியவை இணைந்த கட்டமைப்பை உருவாக்க, கட்டாய சேமிப்பு மூலம் இணை-பணம் செலுத்தும் தனிமனிதர் பொறுப்பு எனும் மூன்றாவது கூறையும் ஏற்படுத்தியது என்று அமைச்சர் ஓங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்