தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மலைப்பாம்பு பரிதாபமாகக் காட்சி அளித்ததால் அதனைக் கொன்றேன்’

2 mins read
e680fa82-c3d4-4909-9cc4-cec2287b9b04
மலைப்பாம்பைத் தாக்கிக் கொன்றதன் காணொளிக் காட்சிகள். - படங்கள்: ஏக்கர்ஸ் / ஃபேஸ்புக்

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மலைப்பாம்பைப் பெரிய கத்தியால் தாக்கிக் கொன்றவருக்கு தேசிய பூங்காக் கழகம் 1,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.

பூன் லே வட்டாரத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டது.

அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும் மலைப்பாம்பைக் கொன்ற ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாகப் பிரிவு இயக்குநர் ரயன் லீ, புதன்கிழமையன்று தெரிவித்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அபராதத்தைச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.

வனவிலங்குச் சட்டத்தின்கீழ் தகுந்த அனுமதியின்றி வனவிலங்குகளைக் கொல்வது குற்றமாகும். முதன்முறை குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறு மாதச் சிறைத் தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

பூன் லே பிளேஸ் உணவங்காடிச் சந்தையில் மலைப்பாம்பு கொல்லப்பட்டது. கொன்றவர் 54 வயது ரிக்கி சியோங் என்று சாவ்பாவ் நாளிதழ் அடையாளம் கண்டது.

பூன் லே பிளேஸ் உணவங்காடிச் சந்தையில் அவர் உணவுக் கடை உதவியாளராக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மலைப்பாம்பைக் கொல்வது முதலில் தனது எண்ணமாக இல்லை என்று திரு சியோங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். உணவுக் கடையை மூடிக்கொண்டிருந்தபோது மலைப்பாம்பைச் சுற்றி பலர் நின்றிருந்ததாகச் சொன்னார்.

மலைப்பாம்பைத் தூக்கியபோது அது தனது இடது கையைக் கடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அதன்மீது காலி பெட்டிகள், வாளி உள்ளிட்டவற்றை வீசியதாகவும் கூறினார். அதற்குப் பிறகு மலைப்பாம்பு பிடிபட்டது. அது உடல்நலம் குன்றி தவித்துக்கொண்டிருந்ததாக திரு சியோங் குறிப்பிட்டார்.

வலியில் துடித்துக்கொண்டிருந்த மலைப்பாம்பு பரிதாபமாகக் காணப்பட்டதால் அதன் துயரத்தைத் துடைக்க தனது பெரிய கத்தியால் அதைக் கொன்றதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்