சண்முகம்: தற்காத்துக்கொள்ளும் உரிமை உள்ள இஸ்ரேலுக்கு கவனமின்றி பொதுமக்களைக் கொல்லும் உரிமை கிடையாது

சண்முகம்: தற்காத்துக்கொள்ளும் உரிமை உள்ள இஸ்ரேலுக்கு கவனமின்றி பொதுமக்களைக் கொல்லும் உரிமை கிடையாது

2 mins read
4e82da3a-801c-4d15-8ff4-39583d72f8fc
மருத்துவமனை ஒன்றின் முகாமில் உள்ள படுக்கையில் உறங்கும் இஸ்ரேலியத் தாக்குதல்களிலிருந்து தப்பியோடிய பாலஸ்தீன சிறுவன். - படம்: ராய்ட்டர்ஸ்

தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு, ஆனால் கவனமின்றி பொதுமக்களைக் கொல்லவோ ஒட்டுமொத்த மக்களும் வெளியேறும் நிலையை ஏற்படுத்தவோ அந்நாட்டுக்கு உரிமை கிடையாது என்று சிங்கப்பூரின் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

பலரைச் சேர்த்து வைத்து தண்டிப்பது சட்டவிரோதமானது என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டார். காஸாவில் தற்போது இடம்பெறும் நிகழ்வுகளைப் பற்றி அவர் பேசினார்.

“காஸாவில் காணப்படும் பெரும் சோகம் கடுமையானது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். இத்தகைய கடும் சோகத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் சிரமமான ஒன்று,” என்று சனிக்கிழமையன்று ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் திரு சண்முகம் பதிவிட்டார்.

இம்மாதம் 11ஆம் தேதியன்று ஓய்வுபெற்ற வெளியுறவு அமைச்சின் மூத்த தூதரான பிலஹரி கெளசிகன் இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றி எழுதிய கட்டுரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் வெளியானது. அக்கட்டுரைக்கு திரு சண்முகம் பதிலளித்தார்.

‘காஸா போர் சம்பந்தப்பட்ட கொடூரமான, சிக்கலான குழப்பங்களைப் பற்றிய ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மைகள்’ (யார்ட் டுரூத்ஸ் அபெளட் காஸா வார்ஸ் குரூவெல் அண்ட் காம்பிளக்ஸ் டிலெம்மாஸ்) எனும் கட்டுரையில் திரு கெளசிகன் ஹமாஸ் அமைப்பினரின் செயல்களை சாடினார்.

ஹமாசின் செயல்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்த அவரின் கட்டுரை, இஸ்ரேலிய அரசாங்கம் பல ஆண்டுகளாக மேற்கொண்டுவந்த சட்டவிரோத செயல்களில் கவனம் செலுத்தவில்லை என்று திரு சண்முகம் கூறினார்.

“உண்மை என்னவென்றால் இஸ்ரேல் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்துலக சட்டத்துக்கு மாறாக இருந்து வருகின்றன. இஸ்ரேலை முழுமையாக அழிக்கவேண்டும் என்ற நோக்கில் பாலஸ்தீனத் தலைவர்களில் சிலர் மோசமாக நடந்துகொண்டனர் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டிய அதே வேளையில் இதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்,” என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்