பிடோக் நார்த்தில் மூவர் உயிரிழந்த தீச்சம்பவம் கவனமின்றி விடப்பட்ட சிகரெட்டால் மூண்டது: மரண விசாரணை அதிகாரி

பிடோக் நார்த்தில் மூவர் உயிரிழந்த தீச்சம்பவம் கவனமின்றி விடப்பட்ட சிகரெட்டால் மூண்டது: மரண விசாரணை அதிகாரி

1 mins read
5749d9c7-3b4d-4b14-aff2-9a161b7c1bb3
2022ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி, புளோக் 409 பிடோக் நார்த் அவென்யூ 2ல் உள்ள வீட்டில் மூண்ட தீயில் 3 வயதுச் சிறுமியும் அவள் தந்தையும் மாண்டனர். - கோப்புப் படங்கள்: ஃபேஸ்புக்/சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

பிடோக் நார்த்தில் சென்ற ஆண்டு அடுக்குமாடி வீடு ஒன்றில் மூண்ட தீயில் மூன்று வயதுச் சிறுமியும் 35 வயதான அவள் தந்தையும் உயிரிழந்தனர். அதே வீட்டில் வசித்த மற்றோர் ஆடவர் அணைக்காமல் விட்டுச்சென்ற சிகரெட்டால் அந்தத் தீ மூண்டதாகவும் புகையை சுவாசித்ததால் அவர்கள் மாண்டதாகவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிகரெட்டை கவனமின்றி விட்டுச்சென்ற ஆடவரின் காதலியும், வீட்டு உரிமையாளருமான 56 வயதுப் பெண்ணும் அந்தச் சம்பவத்தில் மாண்டார். புகையை சுவாசித்ததுடன் அதிகப்படியான தீக்காயங்களால் அப்பெண் மாண்டதாகக் கூறப்பட்டது.

அந்த மூவரும் மாண்டது துரதிர்ஷ்டவசமான துயரச் சம்பவம் என்று மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா கூறினார்.

சம்பவத்தில் யாரும் தவறிழைத்ததாகத் தெரியவில்லை என்று கூறிய அவர், சம்பவத்தில் மாண்ட பெண்ணின் குடும்பத்தினரும் அதை விபத்து என்றே கருதுவதாகக் குறிப்பிட்டார்.

சம்பவ நாளன்று அதிகாலையில் வேலைக்குக் கிளம்பிய அப்பெண்ணின் காதலர், காலணிகளை அணிவதற்காக தான் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை வீட்டின் வரவேற்பறையில் இருந்த அட்டைப் பெட்டியில் வைத்ததாகவும் பின்னர் அதை மறந்து வெளியில் சென்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

அதுகுறித்து எச்சரித்து தன் காதலிக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியும் நிலைமை கைமீறிப் போனதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்