சவாலான காலத்திலும் மனந்தளராத செய்தித்தாள் விநியோகிப்பாளர்

சவாலான காலத்திலும் மனந்தளராத செய்தித்தாள் விநியோகிப்பாளர்

2 mins read
425a2562-6d7d-4025-94cb-e6769afdce4b
64 வயது செய்தித்தாள் விநியோகிப்பாளர் ரத்னகுமார் சொக்கலிங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்னிலக்கமயமாகிவரும் இந்தக் காலத்தில் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கும் பெரிய அளவில் குறைந்து வருகிறது.

அப்படியிருந்தும் மனந்தளராமல் அவற்றை விநியோகிப்பதை நேசிக்கிறார் 64 வயது ரத்னகுமார் சொக்கலிங்கம். திரு குமார் என்றழைக்கப்படும் இவர், எஸ்பிஎச் மீடியாவின் ஆறு செய்தித்தாள்களை விநியோகிக்கும் 390 விநியோகிப்பாளர்களில் ஒருவர்.

“1990களில் நான்கு பகுதிநேர ஊழியர்களை நியமித்து ஒரு வேன் வாகனத்தை ஓட்டி என்னால் தினமும் சுமார் 1,800 செய்தித்தாள்களை விநியோகிக்க முடிந்தது,” என்றார் திரு குமார். தனது 42 ஆண்டு சேவையில் இவர் செய்தித்தாள் விற்பனை சிறப்பாக இருந்ததையும் அனுபவித்திருக்கிறார் விற்பனை சரிந்ததையும் எதிர்நோக்கியிருக்கிறார்.

தற்போது ஒரு பகுதிநேர ஊழியரைக் கொண்டு திரு குமார் இப்பணியை மேற்கொண்டு வருகிறார். திரு குமாரின் உடல்நலன் சரியில்லாமல் இருக்கும் வேளைகளில் விக்னே‌ஷ் எனும் இவரின் 34 வயது மகன் உதவுவார்.

குறிப்பாக கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் தனது தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக திரு குமார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அந்தக் காலகட்டத்தில் சில அலுவலகங்களும் ஹோட்டல்களும் செய்தித்தாள் வாங்குவதை நிறுத்திக்கொண்டதாக சொன்னார்.

கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும் அவற்றில் சில மீண்டும் செய்தித்தாள்களை வாங்க விரும்பவில்லை என்று திரு குமார் குறிப்பிட்டார்.

செய்தித்தாள் விநியோகிப்பாளர்களுக்கு உதவுவது குறித்து ஆலோசிக்க சிங்கப்பூர் செய்தி விற்பனையாளர் சங்கமும் சிங்கப்பூர் செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் சங்கமும் இவ்வாண்டு அக்டோபர் மாதம் சந்தித்துப் பேசின. செய்தித்தாள்களை நேரடியாக விநியோகிப்பதற்கான கட்டணத்தை அதிகரிப்பது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஒன்று.

இந்தக் காலகட்டத்திலும் முதியவர்கள் தன்னிடமிருந்து தொடர்ந்து செய்தித்தாள்களை வாங்குவதாகக் கூறி திரு குமார் பெருமைப்படுகிறார். செய்தித்தாள் விநியோகக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் முதியவர்கள், அதிலும் குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் செய்தித்தாள் வாங்குவதை நிறுத்தக்கூடும் என்று திரு குமார் கவலை தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு சந்தாதாரரிடம் சென்று செய்தித்தாள்களை வழங்கும்போது விற்பனையாளருக்கு மாதந்தோறும் மூன்று வெள்ளி விலைக் கழிவை எஸ்பிஎச் மீடியா வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்