தற்காலிகப் படகு, கப்பல் முனையத்தைக் கட்ட மேப்பல்ட்ரீ நிறுவனத்துக்கு அனுமதி

தற்காலிகப் படகு, கப்பல் முனையத்தைக் கட்ட மேப்பல்ட்ரீ நிறுவனத்துக்கு அனுமதி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Nov 2023 - 7:37 pm

2 mins read

தற்காலிகப் படகு, கப்பல் முனையம் ஒன்றைக் கட்ட சொத்து நிறுவனமான மேப்பல்ட்ரீக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

தற்போது ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தில் ஒரு படகு, கப்பல் முனையம் அமைந்துள்ளது. அங்கிருந்து இந்தோனீசியாவின் பாத்தாம் போன்ற இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.

ஒருவேளை அந்நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் தற்காலிக முனையம் அமைக்க இந்த அனுமதி வழிவகுக்கும்.

இரண்டு தளங்கள் அமையவுள்ள தற்காலிகப் படகு, கப்பல் முனையத்தைக் கட்ட நகர மறுசீரமைப்பு ஆணையம், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஹார்பர்ஃபிரண்ட் ஃபோர் நிறுவனத்துக்கு எழுத்து வடிவில் அனுமதி வழங்கியது. ஹார்பர்ஃபிரண்ட் ஃபோர், மேப்பல்ட்ரீயின்கீழ் செயல்படும் நிறுவனம்.

தற்காலிகப் படகு, கப்பல் முனையம் கட்டப்பட்டால் அதன் பரப்பளவு 17,428.68 சதுர மீட்டராக இருக்கும் என்று அனுமதி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிக முனையத்தை 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்கீழ் 2033ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதிவரை அதை உபயோகிக்கலாம்.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் படகுகள், கப்பல்களில் ஏறுவதற்கான பாலங்கள் (ஜெட்டி) உள்ளிட்டவற்றை இடம் மாற்றி அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தற்காலிக முனையத்திற்கான தேவை இல்லாமல் போகும்போது அது இடிக்கப்படவேண்டும்.

பல அலுவலகங்கள் உள்ள ஹார்பர்ஃபிரண்ட் டவர் ஒன் கட்டடத்தையும் தற்காலிக முனையத்தையும் இணைக்கும் கூரையிடப்பட்ட நடைபாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஹார்பர்ஃபிரண்ட் டவர் ஒன், ஹார்பர்ஃபிரண்ட் பகுதியில் மேப்பல்ட்ரீ நிறுவனம் அமைத்துள்ள பல கட்டடங்களில் ஒன்று. மேப்பல்ட்ரீ, தெமாசெக் முதலீட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.

13 தளங்கள் உள்ள ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தில் அலுவலகங்களும் சில்லறை வர்த்தகக் கடைகளும் உள்ளன. அக்கட்டடம் முன்னதாக வோர்ல்ட் டிரேட் சென்டர் என்றழைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கப்பல்படகுநகர மறுசீரமைப்பு ஆணையம்