கரிமச் சந்தையில் ஒத்துழைப்புக்கு வகைசெய்யும் இணக்கக் குறிப்பில் சிங்கப்பூரும் ருவாண்டாவும் கையெழுத்திட்டுள்ளன.
சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சின் துணைச் செயலாளர் கீத் டான், ருவாண்டாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷோன் டி’ஆர்க் இருவரும் சனிக்கிழமையன்று இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டனர்.
சிறிய நாடுகளான சிங்கப்பூரும் ருவாண்டாவும் இணைந்து செயல்பட்டுவரும் நல்லுறவைக் கொண்ட நாடுகள் என்றார் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன். காப்28 பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அவர் இதனைச் சொன்னார்.
கரிமப் புள்ளிகள் (கார்பன் கிரெடிட்ஸ்) தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் ஒத்துழைக்க சிங்கப்பூர் குறைந்தது 12 நாடுகளுடன் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது. சிலி, கொலம்பியா, மங்கோலியா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாயின.
கரிமப் புள்ளிகள் தொடர்பிலான ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுடன் செய்துகொள்ள இந்த இணக்கக் குறிப்புகள் வழிவகுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

