கரிமப் புள்ளி வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் சிங்கப்பூரும் பராகுவேயும் கையெழுத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், பராகுவேயில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சிங்கப்பூர் நிறுவனங்கள் கரிமப் புள்ளிகளை வாங்கலாம். அதன் மூலம் சிங்கப்பூர் நிறுவனங்கள் தாங்கள் செலுத்தவேண்டிய கரிம வரியில் கழிவு பெறக்கூடும்.
2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளும் கரிமப் புள்ளி வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது, பராகுவே முதன்முறையாக இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வாக அமையலாம்; அதேவேளை, லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றுடன் சிங்கப்பூர் முதன்முறையாக இத்தகைய ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட நிகழ்வாகவும் ஆகலாம் என்று சிங்கப்பூரின் தேசிய பருவநிலை மாற்றச் செயலகம் தெரிவித்தது.
துபாயில் நடைபெறும் காப்28 பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டபோது சிங்கப்பூர் மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், பராகுவே அதிபர் சன்டியாகோ பினா இருவரும் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து கரிமப் புள்ளி வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றது

