980 நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்தவருக்குச் சிறை

1 mins read
c4dd9da1-7498-4775-a752-7c5b974226ab
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவனங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் வர்த்தகத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் ஆடவர் நடத்தினார்.

பெரும்பாலும் சீனாவில் உள்ள பயனர்களுக்கு சேவைகளை வழங்கிய அவர் 980 நிறுவனங்களின் இயக்குநராகப் பொறுப்பு வகித்தார்.

இரண்டு நிறுவனங்களில் தனது பொறுப்புகளை சரிவரப் பூர்த்திசெய்யாததால் குற்றவாளியான 37 வயது சியே யோங்கிற்கு செவ்வாய்க்கிழமையன்று நான்கு வாரச் சிறைத் தண்டனையும் 57,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன. நிறுவன சட்டத்தின்கீழ் தன்மீது சுமத்தப்பட்ட 18 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புகொண்டார்.

சிங்கப்பூரில் உள்ள ‘யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன்’ பல்கலைக்கழகத்தின் கிளையில் சியே நிபுணத்துவ கணக்காய்வில் முதுநிலை பட்டம் பெற்றவர் என்று துணை அரசாங்க வழக்கறிஞர் ஜேனிஸ் சீ தெரிவித்தார். 2013ஆம் ஆண்டில் சியே, டாக்ஸ் டெக்னாலஜி எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அதன் பெயரை டிடி கார்ப்பரெட் செர்விசஸ் என்று மாற்றினார்.

முதலில் சிங்கப்பூர் வாசிகளுக்கு மட்டும் சேவைகளை வழங்கிய அந்நிறுவனம் பிறகு சீனாவில் இருக்கும் பலருக்கு சேவைகளை வழங்கத் தொடங்கியது.

சீனாவில் உள்ள பயனாளர்களுக்கென சியே பல நிறுவனங்களைத் தொடங்கினார். அவற்றில் ஊழியர்களைச் சேர்த்து அவர்களைப் பொறுப்பில் அமர்த்துவது போன்றவற்றின் தொடர்பில் பல முறைகேடுகளும் மோசடிகளும் நடந்தன. சம்பந்தப்பட்ட தகவல்களை சியே ஒழுங்காக சரிபார்க்காததால் பிரச்சினை எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்