கனவுலகாக மாறியது ஆர்ச்சர்ட் சாலை

கனவுலகாக மாறியது ஆர்ச்சர்ட் சாலை

3 mins read
2d8e508e-c823-4c88-be70-b558ca00d2b2
ஆர்ச்சர்ட் ரோட்டில் கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்கு அலங்காரம். - படம்: டினேஷ் குமார்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆர்ச்சர்ட் ரோட்டில் ஒவ்வோர் ஆண்டும் களைகட்டும் ஒளியூட்டு, 40வது ஆண்டாக இவ்வாண்டும் மக்களைப் பிரம்மிக்க வைத்துள்ளது.

முதன்முதலில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 100,000 சிறு ஒளி விளக்குகளால் ஆன தோரணங்களைக் கொண்டு, ஆரஞ்சு குரோவ் ரோடு முதல் இஸ்தானா வரை ஒளியூட்டு அமைந்திருந்தது. பின்னர், ஆண்டுதோறும் வெவ்வேறு கருப்பொருள்களை மையமாகக் கொண்டு, வெவ்வேறு வடிவமைப்புக் குழுக்களால் இந்த ஒளியூட்டு அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு குழந்தைகளின் கனவுலகை மையமாகக் கொண்டு ஒளியூட்டு அமைந்துள்ளது.

நவம்பர் 16 அன்று ஒளி வீசத் தொடங்கிய விளக்குகள், 14.2 மீட்டர் உயர வளைவு அலங்காரத்தில் தொடங்கி 3.1 கிலோமீட்டர் சாலையின் இருபுறங்களிலும் விளக்கொளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 160க்கும் மேற்பட்ட விளக்குக் கம்பங்களும் 106 மரங்களும் விளக்கொளியில் பிரகாசிக்கின்றன.

மேகங்கள், கலைமான், கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள் கொண்ட பிரம்மாண்ட வளைவு.
மேகங்கள், கலைமான், கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள் கொண்ட பிரம்மாண்ட வளைவு. - படம்: டினே‌ஷ் குமார்

குழந்தைகளுக்கு விருப்பமான வகையில், பஞ்சு மிட்டாய்களால் ஆன காற்றில் மிதக்கும் மேகங்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், கலைமான், கரடி பொம்மை வடிவிலான விளக்குகளால் நிறைந்துள்ளது ஆர்ச்சர்ட் ரோடு.

வழக்கமான வெள்ளை, தங்க நிற விளக்குகளுடன் கனவுலகை மேலும் அழகாக்கும் இளஞ்சிவப்பு, டர்கொய்ஸ் நீலம், மஞ்சள் நிற விளக்குகளும் நேர்த்தியாகக் கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தை விட அதிகமாக, இவ்வாண்டு ஏறத்தாழ 4 முதல் 5 மில்லியன் மக்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மலேசியாவிலிருந்து சுற்றுலாவுக்காக 2 குழந்தைகளுடன் வந்துள்ள திருவாட்டி கவிதா, 33, “குழந்தைகள் இந்த ஒளியூட்டைக் குதூகலத்துடன் கண்டுகளிக்கிறார்கள். எங்களுக்கும் பண்டிகைக் கால புத்துணர்வை இது வழங்குகிறது,” என்றார்.

தோ பாயோ பகுதியிலிருந்து வந்திருந்த சமுத்திரமதி, 40, “இந்த ஆண்டு நான் இங்கு வருவது இரண்டாவது முறை. கடந்த வாரம் வந்தபோது இரவு நேரத்தில் விளக்குகளை ரசித்தேன். இம்முறை சற்றே வெளிச்சம் இருக்கும் நேரம் தொட்டு, இருள் சூழும் நேரம் வரை காத்திருந்து பார்க்க எண்ணுகிறேன்,” என்றார்.

இரு குழந்தைகள், குடும்பத்துடன் வந்திருந்த சசிகுமார், 35, “ஒவ்வோர் ஆண்டும் இந்த நேரம் வரும்பொழுதும் மனதில் துள்ளல் ஏற்படும். 40 ஆண்டுகளை எட்டியிருக்கும் இந்த ஒளியூட்டைக் காண வியப்பாகவும் உற்சாகமாகவும் உள்ளது,” என்றார். அவரின் மனைவி, “எனக்கு ஆர்ச்சர்ட் ரோடு ஒளியூட்டு விருப்பமான ஒன்று. விளக்குகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றன. இந்த மேகங்கள் எனக்கு அவ்வளவாக ரசிக்கும்படி இல்லாவிட்டாலும் கிறிஸ்துமஸ் மரம், பிற பொம்மை வடிவங்கள் கண்களைப் பறிக்கின்றன,” என்றார்.

விளக்கொளியில் பிரகாசிக்கும் மரங்கள்.
விளக்கொளியில் பிரகாசிக்கும் மரங்கள். - படம்: டினே‌ஷ் குமார்

தம் குழந்தையுடன் ஒளியூட்டை ரசிக்க வந்த தான்யா, 35, “முடிந்தவரை எல்லா ஆண்டும் இந்த நேரத்தில் ஆர்ச்சர்ட் வந்துவிடுவேன். இந்த ஆண்டு குழந்தையுடன் வந்து வண்ண விளக்குகளைக் கண்டு ரசிப்பதில் தனி மகிழ்ச்சிதான்,” என்றார்.

கண்களுக்கு விருந்தாகும் காட்சிகளுடன் 25 கண்ணாடி பேனல்கள், நீ ஆன் சிவிக் பிளாசா, பிளாசா சிங்கப்பூரா, ஷா ஹவுஸ் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வண்ண அலங்காரங்களால் நிறைந்த மூன்று கிறிஸ்துமஸ் கிராமங்கள், காதுகளுக்கு இனிமையான கிறிஸ்துமஸ் கேரல் இசை நிகழ்வுகள், உணவு அங்காடிகள் என இவ்வாண்டு ஆர்ச்சர்ட் ரோடு விழாக்கோலம் பூண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்