லிம் தியனிடம் விசாரணை

லிம் தியனிடம் விசாரணை

2 mins read
dbf3f236-65d9-481e-9811-82e33e8ef6d1
வழக்கறிஞரும் எதிர்த்தரப்பு அரசியல்வாதியுமான லிம் தியன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வழக்­க­றி­ஞ­ரும் எதிர்த்தரப்பு அர­சி­யல்­வா­தி­யுமான லிம் தியன் மீதான விசாரணை டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது.

தனக்காக வாதாட வேண்டிய வழக்கறிஞரை மாற்றுதல், அதிபர் தேர்தல் வேட்பாளருக்கு உதவுதல், இரைப்பை குடல் அழற்சி போன்ற காரணங்களை முன்வைத்து அவரது வழக்கில் விசாரணை சிலமுறை தள்ளிப் போடப்பட்டது.

முன்னதாக, 59 வயது லிம் மீது, தகுந்த சான்றிதழ் இல்லாமல் வழக்கறிஞராகச் செயல்பட்டது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதிக்கும் ஜூன் 9ஆம் தேதிக்கும் இடையில் அவர் அவ்வாறு வழக்கறிஞர் சேவை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் லிம் மறுத்தார்.

தகுந்த சான்றிதழ் இல்லாமலே 32 முறை அவர் நீதிமன்றத்தில் வாதிட்டதாகவும் மேலும் 32 வழக்குகளில் நீதிமன்ற ஆவணங்களைத் தயாரித்துத் தந்ததாகவும் கூறப்படுகிறது. லிம் வழக்கறிஞராகச் சேவை வழங்குவதற்கான உரிமம் காலாவதியாகி அது புதுப்பிக்கப்படுவதற்கு முன்னால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவ்வாறு வழக்கறிஞர் சேவை வழங்கினார்.

சான்றிதழுக்கான வருடாந்தர விண்ணப்ப நடைமுறையில் முக்கிய அம்சமான தொழில்முறை முன்காப்பீட்டுக் கட்டணத்தை லிம் செலுத்தத் தவறியதால் அவரது சான்றிதழைப் புதுப்பிக்க இயலவில்லை என்று கூறப்பட்டது.

சான்றிதழ் இல்லாமலே வழக்கறிஞர் சேவை வழங்குவது தொடர்பில் லிம்முக்கு ஆலோசனை கூறிய சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்க முன்னாள் உதவி இயக்குநர் ரெஜினி ராமனிடம் டிசம்பர் 27ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை தொடர்வதாகக் கூறப்பட்டது. சான்றிதழ் இல்லாமல் வழக்கறிஞர் சேவை வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் லிம்முக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, $25,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். லிம் முதல்முறை குற்றம் செய்தவர் என்றால் இது பொருந்தும். இல்லாவிடில் அவர் இருமடங்கு தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

குறிப்புச் சொற்கள்