மின்னல் தாக்கிய கட்டுமான ஊழியர்கள் மூவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

மின்னல் தாக்கிய கட்டுமான ஊழியர்கள் மூவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

1 mins read
ada479d6-a7af-4af7-8b4c-0cd5c31801f1
பார்ட்லி பீக்கன் கட்டுமானத் தளத்தில் ஒரு புளோக்கின் கூரையில் அந்த மூன்று ஊழியர்களும் வேலை செய்ததாக வீவக கூறியது. - படம்: சாவ்பாவ்

மவுண்ட் வெர்னன் ரோட்டில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, மின்னல் தாக்கியதால் பாதிக்கப்பட்ட கட்டுமான ஊழியர்கள் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

பார்ட்லி பீக்கன் பிடிஓ கட்டுமானத் தளத்தில் நடந்த சம்பவம் குறித்துப் பிற்பகலில் தகவல் தரப்பட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த வீவக, பார்ட்லி பீக்கன் கட்டுமானத் தளத்தில் ஒரு புளோக்கின் கூரையில் அந்த மூன்று ஊழியர்களும் வேலை செய்துகொண்டிருந்தபோது மழை பெய்யத் தொடங்கியதாகக் கூறியது.

“மழை பெய்யும் நேரத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைக்கு ஏற்ப அந்த ஊழியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகரத் தொடங்கியிருந்தனர். அதற்குள் அவர்கள் வேலை செய்த இடத்திற்கு அருகே மின்னல் தாக்கியது,” என்று கழகம் குறிப்பிட்டது.

ஊழியர்கள் மூவரும் மயக்கம் வருவதாகக் கூறியதாகவும் அது தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் டிசம்பர் 28ஆம் தேதி உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களில் இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் மூன்றாமவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

மூவரின் உடல்நிலையும் தேறிவருவதாக வீவக கூறியது.

விரைவில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வசிப்பிடத்திற்கு அனுப்பப்படுவர் என்று அது சொன்னது.

அவர்களின் உடல்நலத்தை உறுதிசெய்ய குத்தகை நிறுவனத்துடன் இணைந்து, அணுக்கமாகக் கண்காணிக்கவிருப்பதாகவும் கழகம் கூறியது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரித்து வருவதாக மனிதவள அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்