புத்தாண்டு அன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் கத்திக்குத்தால் ஐவர் காயம்

1 mins read
f7ada9fb-51be-4552-908e-e34cea771870
ஐவரைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்தாண்டு தினத்தன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரல், 11வது மாடியிலிருந்து கத்திக்குத்துக் காயங்களுடன் ஐந்து பேர் காலை 4 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 4.10 மணியளவில் எண் 181 ஆர்ச்சர்ட் ரோடு என்ற இடத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும், ஐந்து பேரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஜனவரி 2ஆம் தேதி தெரிவித்தார்.

அது ஆர்ச்சர்ட் சென்ட்ரலின் முகவரி.

தாக்கியவர், தாக்கப்பட்டவர்களுக்கு அறிமுகமானவர் என அறியப்படுகிறது. அவர்கள் நட்பாக இல்லை என தொடக்க விசாரணைகளில் தெரிய வருவதாக காவல்துறை தெரிவித்தது.

2023 டிசம்பர் 20ஆம் தேதி பாசிர் ரிஸ் வெஸ்ட் பிளாசாவில் உள்ள கைப்பேசி கடை ஒன்றில் ஓர் ஆடவரையும் இரு பெண்களையும் வெட்டியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்ட இரு வாரங்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 150 கத்தி தொடர்பான குற்றச்செயல்கள் நடந்துள்ளன.

இந்தக் குற்றங்களில் கொலை, கொள்ளை, கலவரம், கடுமையான காயம் ஆகியவை அடங்கும், இவற்றில் 36 விழுக்காடு குற்றங்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், 3 விழுக்காடு குற்றங்கள் கல்வி வளாகங்களிலும் நடந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்