தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுப் போக்குவரத்துக் கட்டணம் செலுத்தும் முறையில் ஜூன் 1 முதல் மாற்றம்

2 mins read
621817f2-07b6-4b7d-9cbf-0f70483c5f6a
படங்கள்: - சிம்ப்லிகோ
கோப்புப் படம்:
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், ‘சிம்ப்லிகோ’ சின்னம் இடம்பெறாத ஈஸிலிங்க் அட்டை அல்லது ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து, ரயில் கட்டணங்களைச் செலுத்த இயலாது.

‘சிம்ப்லிகோ ஈஸிலிங்க்’ அட்டை, வங்கி அட்டைகள் அல்லது ‘மொபைல் வாலட்’ எனப்படும் பயன்பாட்டிற்குக் கைப்பேசியுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டண அட்டையைப் பயன்படுத்திப் பயணிகள் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைச் செலுத்தலாம்.

புதிய மாற்றத்தால், மாணவர்கள், மூத்தோர் உட்பட சலுகைக் கட்டண அட்டையைப் பயன்படுத்தும் பயணிகளுக்குப் பாதிப்பு ஏதும் இராது என்று கூறப்பட்டது.

நிலப் போக்குவரத்து ஆணையம், ஜனவரி 9ஆம் தேதி வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் பழைய ஈஸிலிங்க் அட்டைகளை மின்னியல் சாலைக் கட்டணம், வாகன நிறுத்துமிடக் கட்டணம் போன்ற மோட்டர் வாகனம் சம்பந்தப்பட்ட இதர கட்டணங்களைச் செலுத்துவதற்கு தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், பேரங்காடிகளில் சில்லறை வர்த்தகக் கட்டணத்தைச் செலுத்த அவற்றைப் பயன்படுத்த முடியாது.

‘சிம்ப்லிகோ’ நடைமுறைக்கு மாறிக்கொள்ளும் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் அமையும் என்று ஆணையம் கூறியது.

2019ல் அறிமுகம் செய்யப்பட்ட ‘சிம்ப்லிகோ’ நடைமுறையின்கீழ், பயனாளர்கள் தாங்கள் முன்னர் செலுத்திய கட்டண விவரங்களைப் பார்வையிடலாம். மேலும், கைத்தொலைபேசி மூலம் அட்டையில் பணம் நிரப்பலாம்.

அத்துடன், அட்டைகள் தொலைந்துபோனால் அவற்றைத் தடை செய்யவும் இயலும். வங்கி அட்டைகள் மூலம் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைச் செலுத்தவும் ‘சிம்ப்லிகோ’ தளம் அனுமதிக்கிறது.

தற்போது, பெரியவர்கள் செலுத்தும் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களில் மூன்றில் இரண்டு, ‘சிம்ப்லிகோ ஈஸிலிங்க்’ அட்டை அல்லது வங்கி அட்டையைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

‘சிம்ப்லிகோ’ கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி பயணிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பயண அட்டைகளை மேம்படுத்திக்கொள்ளல், கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்தல் ஆகியவற்றில் உதவ, எம்ஆர்டி, எல்ஆர்டி நிலையங்கள், பேருந்து முனையங்களில் சேவைத் தூதர்கள் பணியில் ஈடுபட்டிருப்பர்.

குறிப்புச் சொற்கள்