மனிதவளத் துறையினர் மின்னிலக்கத் திறன்களை புதுப்பித்துக்கொள்வது அவசியம்

2 mins read
92948b67-f343-42dd-bded-89169e216aad
சித்திரிப்பு: - பிக்சா பே

மின்னிலக்க உருமாற்றம் முக்கியத்துவம் பெற்றுவரும் வேளையில், மனிதவளத் துறை ஊழியர்கள் தங்கள் மின்னிலக்கத் திறன்களைப் புதுப்பித்துக்கொள்ளுதல் அவசியம்.

பெரிய அளவிலான தரவுப் பகுப்பாய்வு முதல் மனிதவள மின்னிலக்கம் வரையிலான பல்வேறு திறன்கள், மின்னிலக்க யுகத்தில் தொழில் நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து இவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வழிகாட்ட உதவும்.

‘ஐஎச்ஆர்பி’ எனும் மனிதவளத் துறை நிபுணர் கழகமும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் வெளியிட்ட ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலைத்திறன் புரிதல் அறிக்கையில்’ அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நிறுவனத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதில் மனிதவளத் துறையினரின் பங்கு, மின்னிலக்கப் போட்டித்தன்மைக்கான அதிகரிக்கும் தேவை, மனிதவள நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவுப் படைப்பாற்றலின் தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வு முடிவுகளை அந்த அறிக்கை வெளியிட்டது.

அண்மையில், மனிதவளத் துறையினருக்கான வேலை வாய்ப்புத் தகுதிகளில் மனிதவள உத்தி மற்றும் ஊழியரணித் திட்டமிடல், நிறுவன மேம்பாடு ஆகியவற்றுக்கான திறன் ஆதரவுக்கான தேவை அதிகரித்துள்ளது. நவீன மனிதவளத் துறை நிபுணர்களுக்கு மின்னிலக்கத் திறன் ஒரு கட்டாயத் தேவையாக விளங்குவதை அறிக்கை சுட்டியது.

கடந்த ஆண்டுகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள் மின்னிலக்க உருமாற்றத்துக்கு உட்பட்டன. அதனால் மனிதவளத் துறை வேலைக்கான எதிர்பார்ப்பும் மாற்றம் கண்டுள்ளது. மின்னிலக்கத் திறன் மதிக்கப்படுகிறது என்ற நிலைக்கு அப்பால் அது கட்டாயமாகப் பார்க்கப்படுகிறது.

பெரிய தரவுகளை ஆய்வுசெய்தல், மின்னிலக்கமயமாதல், தரவுப் பாதுகாப்பு நிர்வாகம், தரவு, தகவல் நிர்வாகம், மனிதவள ஆய்வும் புரிதலும் ஆகிய ஐந்து திறன்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.

மனிதவளத் துறை வேலைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கமும் அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் திறன் உள்ளோருக்கு மனிதவளத் துறையில் வேலைவாய்ப்பு ஐந்து ஆண்டுகளில் 97% உயர்ந்ததாக அறிக்கை கூறியது.

குறிப்புச் சொற்கள்