தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்துறை வெற்றி, தண்ணீர் விவகாரம் குறித்து அதிபர் தர்மன்

2 mins read
9591d495-71d0-471d-93a6-091a48f40bf7
உலகப் பொருளியல் கருத்தரங்குக் கலந்துரையாடலில் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: உலகப் பொருளியல் கருத்தரங்கு

பொருளியல் மேம்பாடு, வளர்ச்சி ஆகியவை தொடர்பான கொள்கைகள் வெற்றிபெறுவதற்கு, அவற்றுடன் சேர்ந்து பெரிய அளவிலான சமூகக் கொள்கைள் வகுக்கப்படுவது அவசியம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.

மனிதவளத்தைக் கட்டமைக்க, அனைவருக்கும் உயர்தரக் கல்வியை வழங்கும் திட்டவட்டமான அணுகுமுறை தேவை என்றார் அவர்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் உரையாற்றினார்.

இன்றைய சூழலில், திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. குறிப்பிட்ட எந்தத் திறனும் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருத்தமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல இயலாத சூழல் நிலவுகிறது என்பதை அதிபர் சுட்டினார்.

மின்னிலக்கமயமாதல், செயற்கை நுண்ணறிவு, பசுமைப் பொருளியல் ஆகியவை முக்கியத் துறைகளாக இருக்கப் போகின்றன. இந்தத் துறைகளுக்குச் சில திறன்கள் அவசியம் என்று அவர் கூறினார்.

அரசாங்கத் துறை, தனியார் துறை என இரு பிரிவுகளுக்குமான திறன்களுக்குப் பெயர் பெற்ற சிங்கப்பூர், எவ்வாறு நீண்டகாலச் சவால்களைக் கையாள்கிறது என்றும் அதற்குத் தேவையான மனிதவளத்தையும் திறன்களையும் எவ்வாறு கட்டமைக்கிறது என்றும் அந்தக் கலந்துரையாடலில் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அதிபர், “துல்லியமாக என்றில்லாவிட்டாலும் ஓரளவு அது சாத்தியமே. ஆர்வத்துடன் அதில் ஈடுபட வேண்டும். அரசாங்கத் துறை களத்தில் இறங்க வேண்டியது கட்டாயம். ஊழியர்களைத் திரட்டி அவர்களுக்கு ஊக்கம் தரவேண்டும்,” என்று கூறினார்.

இதற்கு மாறாக, தொழில்துறைக் கொள்கையில் மட்டும் நாடுகள் கவனம் செலுத்தினால், காலப்போக்கில் அதற்குக் கூடுதல் செலவாகும் என்றார் அவர்.

எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட நகரில் தொழிற்சாலை அமைக்க முதலீட்டாளர்களை ஊக்குவித்தால், காலப்போக்கில் அது நிலைத்திருக்கத் தேவையான திறன்கள் அவர்களுக்கு இல்லாமல் போகக்கூடும் என்றார் திரு தர்மன்.

டாவோஸ் கலந்துரையாடலில், அரசாங்கம், பொருளியல், தனியார் துறைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பருவநிலை மாற்றத்தில் தண்ணீர் குறித்தும் நீடித்த நிலைத்தன்மையை அடைவதில் தண்ணீரின் பங்கு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பருவநிலை மாற்ற நெருக்கடியைச் சமாளிப்பதில் தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது மிக எளிதான ஒன்று என்று அதிபர் தர்மன் கூறினார்.

ஏற்கெனவே பலன் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம், ஒதுக்கப்பட்டுள்ள நிதி வளம் ஆகியவற்றின் மூலம் தீர்வுகாணலாம் என்றார் அவர்.

“சரியாக முறைப்படுத்திக் கொண்டு இதற்கு நிதி அளித்தால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும்,” என்று திரு தர்மன் கூறினார்.

நீர்வளப் பொருளியலுக்கான உலகக் குழுவின் இணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் அவர், இதற்கான தொழில்நுட்பத்தை வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் அனைத்திலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்