நீரில் மூழ்கும் சம்பவங்களைத் தடுக்க புதிய நீர்ப் பாதுகாப்பு நடைமுறை வழிகாட்டித் தொகுப்புகள்

நீரில் மூழ்கும் சம்பவங்களைத் தடுக்க புதிய நீர்ப் பாதுகாப்பு நடைமுறை வழிகாட்டித் தொகுப்புகள்

2 mins read
d3051a29-b158-4301-afb3-f1b72db053ca
நீர்ப் பாதுகாப்பு நடைமுறை வழிகாட்டித் தொகுப்புகளின் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய திருவாட்டி பரோதி பாண்டே. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்கள் நீரில் மூழ்கும் அபாயத்தைத் தடுக்க உதவும் நோக்கில் நீர்ப் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நடைமுறை வழிகாட்டித் தொகுப்புகள் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் வழிகாட்டித் தொகுப்பான SS700:2023, ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீர் நடவடிக்கைக் கூடங்களுக்கான வழிகாட்டிக் குறிப்புகளின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.

இரண்டாவது வழிகாட்டித் தொகுப்பான SS701:2023, தரையிலும் நீர்ப் பரப்பிலும் நடைபெறும் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் அம்சங்களின் புதிய பட்டியல்.

ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி அரங்கில் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நீர்ப் பாதுகாப்பு நடைமுறை வழிகாட்டித் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஸ்போர்ட் சிங்கப்பூர் (ஸ்போர்ட்எஸ்ஜி) அமைப்பும் சிங்கப்பூர் தரநிலைகள் மன்றமும் இணைந்து இத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மூதாட்டி பரோதி பாண்டே, 72, இத்தகைய விதிமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜூலை 2018ல் இந்தோனீசியாவின் பாலி கடற்கரைக்கு அருகே தன் மகள் அகாங்ஷா பாண்டே நீரில் மூழ்கி இறந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

அப்போது இத்தகைய பாதுகாப்பு விதிமுறைகள் நடப்பில் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தெளிவான வழிகாட்டிக் குறிப்புகளும் தரநிலைகளும் பின்பற்றப்பட்டால் நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்து மக்களைக் காக்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.

புதிய நீர்ப் பாதுகாப்பு விதிமுறைகளின் அவசியத்தை வலியுறுத்திய ஆக்டிவ்எஸ்ஜி அமைப்பின் விளையாட்டுப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் டெல்ஃபின் ஃபாங், நீர் நடவடிக்கைகளை நடத்தும் அமைப்புகளும் அவற்றுக்கான வசதிகளை நிர்வகிக்கும் அமைப்புகளும் புதிய வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்றுமாறு ஊக்குவித்தார்.

புதிய வழிகாட்டிக் குறிப்புகளை ‘சிங்கப்பூர் ஸ்டேண்டர்ட்ஸ்’ மின்விற்பனைத் தளத்தில் வாங்க இயலும்.

குறிப்புச் சொற்கள்