தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்ற ஆண்டு 12,000க்கு மேற்பட்ட சட்டவிரோத சுகாதாரப் பொருள்களுக்கு தடை; 1.12 மி. பொருள்கள் பறிமுதல்

1 mins read
72a6f5f1-e7ea-4d72-beb0-544b2512c9c5
சுகாதார அறிவியல் ஆணையம் இணைய விற்பனைத் தளங்களில் விற்பதற்குத் தடை விதித்த பொருள்களில் சில. - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

சிங்கப்பூர் மின்வர்த்தகத் தளங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் சென்ற ஆண்டு (2023), 12,474 சட்டவிரோத சுகாதாரப் பொருள்களுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் கூறியிருக்கிறது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காகும்.

அந்த சட்டவிரோதப் பொருள்களின் விற்பனையாளர்களில் ஏறத்தாழ 48 விழுக்காட்டினர் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டவர்கள் என்று ஜனவரி 30ஆம் தேதி ஆணையம் தெரிவித்தது.

அந்தப் பொருள்கள் பதிவுசெய்யப்படாதவை அல்லது போலியானவை அல்லது சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று ஆணயம் சொன்னது.

சென்ற ஆண்டு அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு ‘இன்டர்போல்’ அனைத்துலகக் காவல் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.

2023 ஜூன் 23 முதல் 30ஆம் தேதி வரை ஷாப்பி, கேரோஸல், ஃபேஸ்புக் ஆகியவற்றின் விற்பனைப் பட்டியலிலிருந்து 800க்கு மேற்பட்ட சட்டவிரோதப் பொருள்களை ஆணையம் நீக்கியது. பின்னர் அக்டோபர் மாதம் மேலும் 4,600 சட்டவிரோதப் பொருள்கள் நீக்கப்பட்டன.

மொத்தம் 1,895 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

சென்ற ஆண்டு ஏறக்குறைய 1.12 மில்லியன் சட்டவிரோதப் பொருள்களைப் பறிமுதல் செய்ததாகவும் ஆணையம் குறிப்பிட்டது. 2022ல் அந்த எண்ணிக்கை 737,000ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்