தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் சொத்து வரி வருவாய் $600 மில்லியன் உயரும்

2 mins read
99758404-83b3-4a35-ba22-9b9d2a0fb964
வரி வருமான உயர்வில் மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர் தங்கியிராத குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்று நிதி இரண்டாம் அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு (2024), வீடுகளுக்கான சொத்து வரி மூலம் கிடைக்கும் வருமானம் $600 மில்லியன் அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதில் மூன்றில் இரண்டு பங்கு, உரிமையாளர் தங்கியிராத குடியிருப்புச் சொத்து வரி என்று நிதி இரண்டாம் அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சீ ஹொங் டாட், பிப்ரவரி 6ஆம் தேதி கூறினார்.

2022ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம் என்றார் அவர்.

அப்போது, சொத்து வரி உயர்வு முழுமையாக நடப்புக்கு வரும்போது அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு $380 மில்லியன் வருமானம் கிடைக்கும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார்.

மார்ச் 2023ல் முடிவடைந்த நிதியாண்டில், சொத்து வரி மூலம் கிட்டிய வருமானம் 9.1 விழுக்காடு அதிகரித்து $5.1 பில்லியனாகப் பதிவானது.

பாட்டாளிக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவருமான பிரித்தம் சிங், இந்த ஆண்டின் சொத்து வரி வருமானம் குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சீ பதிலளித்தார்.

ஓய்வுபெற்ற நிலையில் வருமானம் இல்லாதோருக்கு மாறுபட்ட வரி விகிதம் நடப்புக்கு வருமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “ மூத்தோருக்கு மட்டுமன்றி, மிக அதிக சொத்து வரி உயர்வை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கும் உதவும் வகையில் அரசாங்கம் அதுகுறித்துப் பரிசீலிக்கும்,” என்று கூறினார்.

ஒருமுறை மட்டும் வழங்கப்படும் வரிக்கழிவாக, உரிமையாளர் தங்கியிருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு கிட்டத்தட்ட 100 விழுக்காடும் தனியார் வீட்டு உரிமையாளர்களுக்கு 15 விழுக்காடும் வழங்கப்படும். அதிகபட்சம் $1,000 வரிக்கழிவு வழங்கப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்