தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரவுசெலவுத் திட்டம் 2024 போட்டித்தன்மையைக் கட்டிக்காப்பதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பு

2 mins read
c4de92d0-55b4-441f-87a9-f6d0c098e476
முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்க, போட்டித்தன்மை மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த ஆண்டின் (2024) வரவுசெலவுத் திட்டம் சிங்கப்பூரின் போட்டித்தன்மையைக் கட்டிக்காப்பதில் கவனம் செலுத்தும் என்று பொருளியலாளர்கள் கருதுகின்றனர்.

உற்பத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வருமான வளர்ச்சி, கட்டுப்படியாகக்கூடிய விலையில் கல்வி, சுகாதாரப்பராமரிப்பு ஆகியவற்றுக்கு உலகளாவிய போட்டித்தன்மையைக் கட்டிக்காப்பது முக்கியம்.

புதிய வர்த்தகங்களையும் உற்பத்தி ஆலைகளையும் தொடங்குவதற்கு உள்ளூர், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத் தெரிவாக சிங்கப்பூர் தொடர்வதற்கு போட்டித்தன்மை அடிநாதமாக விளங்குகிறது.

வர்த்தகங்களை மற்ற நாடுகளில் விரிவுபடுத்தவும் உற்பத்தியான பொருள்களை போட்டித்தன்மைமிக்க விலையில் விற்பனை செய்யவும் அது முக்கியம்.

கடந்த சில ஆண்டுகளின் வரவுசெலவுத் திட்டம் போலல்லாமல் இந்த ஆண்டிற்கானது, நீண்டகால விவகாரங்களில் கவனம் செலுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே, உற்பத்தித் தீர்வுகள் மானியம் அதிகரிக்கக்கூடும். அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான செலவுகளை ஈடுகட்ட உதவும் மானியங்கள், பயிற்சி மற்றும் திறன்மேம்பாடு தொடர்பான மானியங்கள் போன்றவற்றை எதிர்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நிறுவனங்கள் நிதியுதவி பெற பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் திட்டங்கள் கூடுதல் காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

2025 முதல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படவிருக்கும் 15 விழுக்காட்டு குறைந்தபட்ச நிறுவன வரியால் ஏற்படும் தாக்கத்தை முதலீட்டாளர்கள் கண்காணிப்பர்.

கொவிட்-19 கிருமிப்பரவலைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படும் நிதியாதரவுத் திட்டங்கள் இம்முறை எளிதில் பாதிக்கப்படக்கூடியோருக்கானவையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தொழில் பாதையை மேம்படுத்த உதவும் வகையில் இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் கூடுதலாகக் கைகொடுக்கும் என்று தொழில்நுட்பக் கல்விக்கழக (ஐடிஇ) மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்