பிப்ரவரி 15 முதல் 29 வரை முதன்முறையாக நாடு தழுவிய ‘எஸ்ஜி தயார்நிலைப் பயிற்சி’

தீவெங்கும் மின்சாரம், நீர் விநியோகத்தில் இடையூறு; ‘டிரோன்’ தாக்குதல்கள்

முதல்முறையாக நாடு தழுவிய ‘எஸ்ஜி தயார்நிலைப் பயிற்சி’ எனும் முழுமைத் தற்காப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

முழுமைத் தற்காப்பு தினத்தின் 40வது ஆண்டையொட்டி நினைவுகூரும் வகையில் பிப்ரவரி 15ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கிய இப்பயிற்சி பிப்ரவரி 29 வரை நீடிக்கும்.

பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத ஆக்கிரமிப்பாளர் சிங்கப்பூர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பாவனைப் பயிற்சிகளில் 500க்கும் மேற்பட்ட கல்வி, சமூகம், வணிக, அரசாங்க அமைப்புகள் பங்கேற்கும்.

மின்சாரம், தண்ணீர், உணவுப் பொருள்கள் வழங்குவதில் ஏற்படும் இடையூறுகள், பொய்த்தகவலைப் பரப்புதல், இணையத் தாக்குதல்கள், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், பீச் ரோட்டிலுள்ள சவுத் பிரிட்ஜ் டவரில் நடைபெற்ற முழுமைத் தற்காப்பு நாள் நினைவு நிகழ்ச்சியில் எஸ்ஜி தயார்நிலை பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

முழுமைத் தற்காப்பு சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், பயங்கரவாதம், நிதி நெருக்கடிகள், கொள்ளைநோய் பரவல் உள்ளிட்ட பல சவால்களில் மக்களுக்கு வழிகாட்டியுள்ளது என்று காணொளி செய்தி மூலம் பேசிய திரு வோங் குறிப்பிட்டார்.

“இந்தச் சவால்களை வெற்றிகொண்டு, வலுவாக மீண்டெழுந்தோம். ஏனென்றால் நாங்கள் ஒன்றுபட்டுச் செயல்பட்டோம், ஒற்றுமையாக இருந்தோம், ஒவ்வொருவரும் அவரவர் பங்கை வகித்தோம். இதுதான் முழுமைத் தற்காப்பின் சாராம்சம்,” என்றார் அவர்.

வெளிச்சூழல் மிகவும் சிக்கலானதாகவும், நிலையற்றதாகவும் மாறிவரும் நிலையில், சிங்கப்பூரின் அடுத்த கட்ட தேச நிர்மாணத்தில் முழுமைத் தற்காப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு எதிரான சிங்கப்பூரின் தயார்நிலையையும் மீள்திறனையும் அதிகரிப்பதே எஸ்ஜி தயார்நிலை பயிற்சியின் நோக்கம் என்றார் அவர்.

மிரட்டல்களைப் பற்றி அறிந்துகொள்ளவும்; அவற்றைச் சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா என்பதை உணர்ந்துகொள்ளவும்; அவை நிகழும்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பயிற்சி செய்யவும்; அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் வோங் வலியுறுத்தினார்.

பிப்ரவரி 15ஆம் தேதி முழுமைத் தற்காப்பு தினம் நினைவுகூரப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது, 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியில் சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் சரணடைந்தது. 1945 செப்டம்பர் 12ஆம் தேதி வரை ஜப்பானியர்கள் சிங்கப்பூரை ஆக்கிரமித்திருந்தனர்.

சிங்கப்பூரைச் சுற்றி அல்லது உலகளவில் தொல்லைகள் அதிகரிக்கும்போது முழுமைத் தற்காப்பு பொருத்தமானதாகிறது என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் தனது உரையில் கூறினார். படம்: லியான்ஹ சாவ்பாவ்

சிங்கப்பூரைச் சுற்றி அல்லது உலகளவில் தொல்லைகள் அதிகரிக்கும்போது முழுமைத் தற்காப்பு பொருத்தமானதாகிறது என்று ‘எஸ்ஜி தயார்நிலை பயிற்சி’ என்ற பாவனைப் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவில் நடக்கும் போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல், அமெரிக்கா - சீனா மோதலால் ஆசியாவில் ஏற்படக்கூடிய போர் ஆகியவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.

முக்கியமாகத் தேவைப்படும்போது தற்காப்பை உடனடியாக ஏற்படுத்த முடியாது என்பதை மறந்துவிட்டதற்காக சில ஐரோப்பிய நாடுகள் புலம்புகின்றன. சில நாடுகள் தேசிய சேவையைக்கூட நிறுத்திவிட்டன. ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்தபோது அதற்காக அவை வருந்தின என்றார் டாக்டர் இங்.

இந்த நாடுகள் தேசிய சேவையை மீண்டும் தொடங்க விரும்புவதாகவும், ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வாசலில் நிற்கும் நிலையிலும் அவர்களால் அதனைச் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

முந்தைய, தற்போதைய தலைமுறைகள் இதுநாள் வரை முழுமைத் தற்காப்பைத் தொடர்வதற்கு சிங்கப்பூர் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகள் சுட்டுகின்றன என்று அவர் கூறினார்.

“நெருக்கடிநிலையின்போது, ஒரு நாடாக, உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு, ராணுவம், குடிமை, பொருளியல், சமூகம், உளவியல், மின்னிலக்கம் ஆகிய ஆறு முழுமைத் தற்காப்புத் தூண்களும் நமக்குத் தேவைப்படும்,” என்றார் தற்காப்பு அமைச்சர் இங்.

சிறந்த காலத்திலும் மோசமான காலத்திலும் அனைத்து சிங்கப்பூரர்களின் கூட்டான, தொடர்ச்சியான முயற்சியாக முழுமைத் தற்காப்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“நம்மால் அதைச் செய்ய முடிந்தால், சிங்கப்பூர் சுதந்திரமாகவும், உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். நாடு சரணடைந்த 1942 பிப்ரவரி 15 அன்று நடந்தது மீண்டும் நடக்காது,” என்றார்.

பயிற்சிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் https://www.gowhere.gov.sg/sgready/ என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பாவனையாக ஏற்படுத்தப்படும் இடையூறு ஏற்படும் காலம், வகை, இடம் குறித்த தகவல்களை அஞ்சல் குறியீடு, தெரு அல்லது கட்டடப் பெயரைக் கொண்டு அறியலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!