இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் சரணடைந்ததை நினைவுகூரும் கண்காட்சி

2 mins read
4afac753-fb37-4f55-b898-380b258d4383
‘புவன விஸ்தா’ மிதிவண்டிச் சுற்றுலாவில் ‘கில்மேன் பரேக்ஸ்’ பற்றி விவரிக்கும் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான திரு லீ கோக் லியோங். - படம்: தேசிய மரபுடைமைக் கழகம்
multi-img1 of 2

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிடம் சிங்கப்பூர் சரணடைந்ததன் 82வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இடம்பெறுகிறது தேசிய மரபுடைமைக் கழகத்தின் வருடாந்தர ‘சிங்கப்பூருக்கான போர்’ (Battle for Singapore) கண்காட்சி.

பிப்ரவரி 17 முதல் மார்ச் 3 வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், சிங்கப்பூரின் போர்க்கால நாள்களைப் பற்றிய பல சுற்றுலாக்கள், திரையிடல்கள், பேச்சுகள், காட்சியகங்கள் இடம்பெறுகின்றன.

அவற்றுக்கு www.museums.com.sg இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

மிதிவண்டிச் சுற்றுலா

போர் நடந்த முக்கிய இடங்களுக்குச் சுற்றுலாக்களும் நடத்தப்படவுள்ளன. அவ்வகையில் இவ்வாண்டு புதிதாக அறிமுகமாகியுள்ளது ‘மிதிவண்டியில் புவன விஸ்தா’ எனும் இரண்டு மணி நேரச் சுற்றுலா. இது புவன விஸ்தாவில் தொடங்கி ஹவ் பா வில்லாவில் நிறைவடையும்.

சிங்கப்பூர் வீழ்வதற்கு முன்பு சிங்கப்பூரின் தென்மேற்குப் பகுதிகளில் நடந்த இறுதி சண்டைகளை நினைவுகூரும் இச்சுற்றுலா, பாசிர் பாஞ்சாங், ‘கில்மன் பேரெக்ஸ்’, ‘அலெக்சாண்ட்ரா’ ராணுவ மருத்துவமனை போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.

சுற்றுலாவை வழிநடத்தும் வரலாற்றாசிரியர் டாக்டர் ஜான் குவாக், வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான திரு லீ கோக் லியோங் இருவரும் ஒவ்வோர் இடத்திலும் அதைச் சார்ந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வர்

இங்குள்ள பல இடங்களுக்கும் மக்கள் பொழுதுபோக்குக்காக வருவதுண்டு. ஆனால், அவற்றில் சிங்கப்பூரின் வரலாறு பொதிந்துள்ளது.
வரலாற்றாசிரியர் டாக்டர் ஜான் குவாக்

“இரண்டு மணி நேரத்தில் நாம் மிதிவண்டியில் செல்லும் தொலைவை ஜப்பானியர்கள் மூன்று நாள்களில் நடந்து கடந்தனர். அது எவ்வளவு கடினம் என்பதை மக்களுக்கு உணர்த்தவும் செய்கிறது இச்சுற்றுலா,” என்றார் டாக்டர் குவாக்.

இச்சுற்றுலாவிற்குக் கட்டணம் $35.

கேஷின் இல்லச் சுற்றுலா

ஜப்பானியர்கள் முதன்முதலில் சிங்கப்பூரில் காலடி எடுத்துவைத்த இடங்களில் ஒன்று லிம் சூ காங் இயற்கைப் பூங்காவில் உள்ள கேஷின் இல்லம்.

ஜோகூர் நீரிணையை நோக்கியுள்ள படகுத்துறையில் கட்டப்பட்ட கேஷின் இல்லம், ஜப்பானியப் படைகள் பிப்ரவரி 8ஆம் தேதி, 1942ல் நடத்திய முதல் தாக்குதலுக்கு வழிவகுத்தது.

இச்சுற்றுலாவிற்குக் கட்டணம் இலவசம். ஆனால், முன்பதிவு தேவை.

அரும்பொருளகங்களில் நிகழ்ச்சிகள்

‘சரணடைவதா என்ற கேள்வியே இல்லை: வீழ்வதற்கு மூன்று நாள்கள் முன்பு’ என்ற 110 நிமிடப் படைப்பு, ‘பேட்டில்பாக்ஸ்’ஸின் (முன்பு ‘ஃபோர்ட் கேனிங்’ பதுங்குகுழி) அதிகாரத்துவத் திறப்பின்போது திரையிடப்படும். இதற்குக் கட்டணம் $48.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் முதியோரின் போர்க்காலக் கதைகளையும் சமையல் குறிப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தில், 1940களின் கலாசார முரண்பாடுகளை ஆராயும் ‘அபோரியா விடுதி’ கண்காட்சியை உருவாக்கிய கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெறும். கட்டணம் இலவசம். ஆனால், முன்பதிவு தேவை.

சிங்கப்பூர் கடற்படை அரும்பொருளகம், சாங்கி தேவாலயம் மற்றும் அரும்பொருளகம் இணைந்து வழங்கும் சுற்றுலாக்களுக்குக் கட்டணம் $21.80.

‘மிண்ட்’ விளையாட்டுப் பொருள்கள் அரும்பொருளகம், எவ்வாறு விளையாட்டுப் பொருள்கள் போர் முயற்சிகளுக்குத் துணைபுரிந்தன என்பதைக் கற்பிப்பதோடு, போர்க்கால விமான மாதிரியைச் செய்யும் பயிலரங்கையும் படைக்கிறது. இதற்கான கட்டணம்: பெரியவர்களுக்கு $35, சிறுவர்களுக்கும் முதியோருக்கும் $25.

தேசிய சின்னமான ‘ஃபோர்ட் சிலோசோ’வின் எட்டுத் துப்பாக்கிகளும் அமைதியின் அடையாளமாக பூக்களால் அலங்கரிக்கப்படும்.

இவை போன்று 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் 70க்கும் மேற்பட்ட சுற்றுலாக்களும் இவ்வாண்டு இடம்பெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்