சிங்கப்பூரின் இலக்கிய முன்னோடி சுரட்மான் காலமானார்

சிங்கப்பூரின் இலக்கிய முன்னோடி சுரட்மான் காலமானார்

1 mins read
d74d6fa5-139f-4e77-a997-051604a81fea
சுரட்மான் மார்கசன் - கோப்புப் படம்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சுரட்மான் மார்கசன் பிப்ரவரி 27ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 93.

தென்கிழக்காசிய விருது, கலாசாரப் பதக்கம், சிங்கப்பூர் இலக்கியப் பரிசு உட்பட உயர் விருதுகளையும் சிறப்புகளையும் பெற்ற சுரட்மான், சிங்கப்பூரின் நவீன மலாய் இலக்கியத்தில் முக்கிய எழுத்தாளராகக் கொண்டாடப்படுபவர்.

1930ஆம் ஆண்டு பாசிர் பஞ்சாங்கில் பிறந்த அவர், 1950களிலிருந்து கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியுள்ளார். மலாய் இலக்கியம், மொழி, கலாசாரம் குறித்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியாவில் எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

அவரது எழுத்துகள் மலாய் சமூகத்தைப் பாதிக்கும் சமூக, கலாசார, அரசியல் மாற்றங்களை வெளிப்படுத்துபவை.

மலாய் மொழி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மலாய், தமிழ்மொழி கல்விக் கழகங்களுக்கான துணை இயக்குநராகவும் விரிவுரையாளராகவும் இருந்துள்ளார். சிங்கப்பூர் மலாய் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், மலாயா வட்டாரத்தின் மிகப் பழமையான மலாய் இலக்கிய அமைப்பான ‘அசாட் ‘50 ’ துணைத் தலைவர் உட்பட முக்கியமான இலக்கிய, மொழி, பண்பாடு தொடர்பான அமைப்புகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

“சிங்கப்பூர் மலாய் இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தனி பாணியைக் கொண்டவர் சுரட்மான். அவருக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரங்கள் கொஞ்ச காலதாமதமாகவே கிடைத்தன,” என்று கூறினார் அவருடன் பணியாற்றிய அனுபவமுள்ள மூத்த தமிழ் எழுத்தாளர் இராம.கண்ணபிரான்.

குறிப்புச் சொற்கள்