ஆப்பிள் நிறுவனம், மார்ச் 5ஆம் தேதி, மென்பொருள் உருவாக்குவோருக்கான முதல் தென்கிழக்காசிய நிலையத்தை சிங்கப்பூரில் திறந்தது.
ஆப்பிள் தயாரிப்புகளில் செயல்படக்கூடிய செயலிகளை உருவாக்கும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்க இந்த நிலையம் உதவும்.
ஒன்-நார்த் வட்டாரத்தின் ‘ஃபியூஷனோபொலிஸ்’ வளாகத்தில் 20,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது ஆப்பிளின் இந்தப் புதிய நிலையம்.
அமெரிக்காவின் கூபர்டினோ, இந்தியாவின் பெங்களூரு, சீனாவின் ஷங்காய் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூரில் நான்காவது நிலையமாக இதை ஆப்பிள் திறந்துள்ளது.
இந்த நிலையத்தில், மென்பொருள் உருவாக்கத்தின் அனைத்து நிலைகளுக்குமான நேரடிப் பயிலரங்குகள், ஆய்வுகள், ஆலோசனை வகுப்புகள் போன்றவை இடம்பெறும்.
‘ஆப் ஸ்டோர்’ மூலம் பதிவிறக்கம் செய்யக்கூடிய 90,000க்கு மேற்பட்ட செயலிகளை உருவாக்கும் பணியில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்கள் ஈடுபடுவதாக ஆப்பிள் நிறுவனம் கூறியது.
இந்த நிலையத்தின் மூலம், மென்பொருளாளர்கள் தாங்கள் உருவாக்கும் செயலி மென்பொருளை உலகெங்கும் பணிபுரியும் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் உதவியோடு மெருகூட்டிக்கொள்ள இயலும்.