பன்னாட்டு ராணுவப் பயிற்சியை நிறைவுசெய்த சிங்கப்பூர் ஆயுதப்படை

பன்னாட்டு ராணுவப் பயிற்சியை நிறைவுசெய்த சிங்கப்பூர் ஆயுதப்படை

1 mins read
62cff1cf-f687-4acd-8508-4ba5fbf9c48a
தாய்லாந்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில், பங்கேற்பு நாடுகளின் பிரதிநிதிகள். - படம்: தற்காப்பு அமைச்சு
multi-img1 of 4

சிங்கப்பூர் ஆயுதப்படை, தாய்லாந்தில் நடைபெற்ற எக்சர்சைஸ் கோப்ரா கோல்டு 2024 (எக்ஸ்சிஜி24) எனும் பன்னாட்டு ராணுவப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளது.

பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை தாய்லாந்தின் ரயோங் மாநிலத்தில் அப்பயிற்சி நடைபெற்றது. அரச தாய்லாந்து ஆயுதப்படையும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் தளபத்தியமும் இணைந்து அந்தப் பயிற்சியை ஏற்று நடத்தின.

43வது முறையாக இந்த ஆண்டு நடைபெற்ற அப்பயிற்சியில் சிங்கப்பூர் ஆயுதப்படை 25ஆம் ஆண்டாகக் கலந்துகொள்கிறது.

பாரம்பரிய, பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் கூட்டு நடவடிக்கைகள், மனிதநேய உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் அந்தப் பயிற்சி கவனம் செலுத்தியது.

இணையத் தற்காப்புப் பயிற்சியின் ஓர் அங்கமாக, மின்னிலக்க, உளவுச் சேவை அதிகாரிகள் எட்டுப் பேர் கொண்ட குழு பாவனைப் பயிற்சியை மேற்கொண்டது.

கர்னல் வோங் ஷி மிங்கின் தலைமையில் 61 பேர் கொண்ட சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழு, பன்னாட்டுக் கூட்டுப் பணிக்குழு நடவடிக்கைகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பங்களித்தது.

தாய்லாந்தின் சந்தாபுரி மாநிலத்தில் உள்ள பான் பிரகெட் பள்ளிக்குப் பன்னாட்டு ஆயுதப்படைக் குழுவினர் கட்டடம் ஒன்றைக் கட்டித்தந்தனர். சிங்கப்பூர் ராணுவ அதிகாரிகள் ஐவர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் ஆகப் பெரிய பன்னாட்டு ராணுவப் பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் எக்ஸ்சிஜி, பங்கேற்கும் நாடுகளிடையே புரிந்துணர்வு, நட்பு போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது.

குறிப்புச் சொற்கள்