$9 மி. மோசடி செய்ததாக 289 பேரிடம் விசாரணை

$9 மி. மோசடி செய்ததாக 289 பேரிடம் விசாரணை

2 mins read
c6fe744f-16c3-453f-bcbd-f8fc8581be80
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமமின்றி கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை கூறியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடியில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 289 பேரை விசாரித்து வருவதாகக் காவல்துறை மார்ச் 29ஆம் தேதி தெரிவித்துள்ளது.

16 வயதிற்கும் 73 வயதிற்கும் இடைப்பட்ட அவர்களில் 175 பேர் ஆண்கள் என்றும் 114 பேர் பெண்கள் என்றும் அது கூறியது.

மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் $9 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

மார்ச் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் சந்தேக நபர்கள் பிடிபட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

முதலீட்டு மோசடி, மின்வர்த்தக மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, அரசாங்க அதிகாரியைப்போல் வேடமிட்டது, போலி மின்னஞ்சல் மோசடி போன்ற 1,400க்கு மேற்பட்ட மோசடிகளில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமமின்றி கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை கூறியது.

ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $500,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

உரிமமின்றி கட்டணச் சேவை வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால் $125,000 வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

“குற்றச்செயல்களில் உடந்தையாக இருப்பதைத் தவிர்ப்பதற்கு, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளையோ கைப்பேசித் தொடர்பையோ பயன்படுத்த பிறர் விடுக்கும் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும். ஏனெனில் வங்கிக் கணக்கோ கைப்பேசியோ குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டால் அவற்றின் உரிமையாளர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்,” என்று காவல்துறை நினைவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்