சிங்கப்பூரில் கொளுத்தும் வெயில் காரணமாக தீவு முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. மார்ச் 27ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் புறஊதா (யூவி) குறியீடு உச்ச நிலையைத் தொட்டது. இதனால் மக்கள் பாதிப்படையக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் எச்சரித்தது.
அத்துடன், காற்றில் அதிக ஈரப்பதம், அதிக நேரம் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது, மோசமான காற்றுத்தரம் போன்றவை மக்களின் உடல்நலத்தை மேலும் பாதிக்கலாம்.
இந்நிலை மற்றவர்களைவிட சிலருக்கு அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வெளிப்புறங்களில் வேலையில் ஈடுபடுவோர் மற்றும் வேலை இடங்களில் குளிரூட்டி வசதிகள் இல்லாமல் இருப்பவர்கள் இதனால் அதிகம் பாதிப்படைவர்.
தங்களுடைய சீருடை அரைக்கை சட்டையாக இருப்பதால் அதிக வெயிலால் தனக்குத் தோல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார் மிதிவண்டியில் உணவு விநியோகம் செய்யும் 24 வயது ஜெக்கியஸ் ஷெர்வின்.
மேலும், அவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாகச் சொன்னார்.
சூரிய ஒளிக்கதிர்களின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தோல்பூச்சு (சன்ஸ்கிரீன்), கையுறை போன்ற தோல் பாதுகாப்புப் பொருள்களை முதலாளிகள் அல்லது அரசாங்கம் வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் ஷெர்வின்.
ஒருசிலர் தங்கள் வழக்கங்களை மாற்றிக்கொள்வதன்மூலம் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது என்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, அதே உணவு விநியோகம் செய்யும் முகம்மது இம்ரான், 26, “இது நோன்பு மாதம் என்பதால் நான் பகல் நேரத்தில் வேலை பார்ப்பதில்லை. என்னுடைய வேலையை மாலை நேரத்திற்கு மாற்றிக்கொண்டு செய்வதால் கடுமையான வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிகிறது,” என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
கட்டுமானத் துறையில் பணிபுரியும் 52 வயது காளிச்சாமி ராதாகிருஷ்ணன், வெயில் அதிகமாக இருந்தாலும் இந்தியாவிலுள்ள குடும்பத்திற்காக சிங்கப்பூருக்கு வந்து வேலை பார்ப்பதால் வேறு வழியில்லை என்று கூறுகிறார்.
வேலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதால் வேலை நேரங்களில் அதிகம் தண்ணீர் குடிப்பதாக அவர் சொன்னார்.
இரவுநேர வேலையை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பும் ஊழியர்கள் அதிக வெப்பம் காரணமாக அறை மிகவும் சூடாக இருப்பதால் உறங்குவதற்குச் சிரமமாக இருப்பதாகவும் கூறுகிறார் கட்டுமான வேலை செய்யும் காளிராஜன், 25.
மேலும், சூட்டைத் தணிப்பதற்குத் தயிர்ச்சோறு போன்ற உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளைச் சாப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிக வெப்பமாக இருக்கும் நாள்களில் வெளிப்புறங்களில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை பத்து நிமிட இடைவேளை கொடுக்கவேண்டும் என்று சென்ற ஆண்டு மனிதவள அமைச்சு அறிவித்த புதிய விதிமுறை தங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாகவும் சிலர் கூறினர்.
‘ஹன்சிகா இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் மேற்பார்வையாளரான கரன், ஏப்ரல், மே மாதங்களில் இதைவிட வெயில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதால், ஊழியர்கள் தங்குவதற்கு குளிரூட்டியுடன் கூடிய தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாகக் கூறினார்.

