தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோய்கள் மீதான பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஆய்வு

2 mins read
வெப்ப எச்சரிக்கை முறை அமைக்கப் பரிந்துரை
81b385c0-d1ba-4120-9a5f-9e65afae43e4
பருவநிலை மாற்றத்தால் டெங்கி போன்ற நோய்கள் மிதமான வெப்பநிலை நிலவும் கூடுதலான இடங்களுக்குப் பரவக்கூடும் என்று கருதப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பருவநிலை மாற்றத்தால் சிங்கப்பூரில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கருதப்படும் வேளையில், வெப்ப எச்சரிக்கை முறையை அமைப்பது குறித்து ஆய்வாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ளனர்.

வெப்ப அலைகளால் நாட்பட்ட நோய்கள் மேலும் மோசமடையலாம் என்பதைச் சுட்டிய அவர்கள், அதன் தாக்கத்தைச் சமாளிக்க அத்தகைய எச்சரிக்கை முறை உதவும் என்று கூறினார்கள்.

வெப்ப அலைகளால் தொடர்ந்து சில நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். அத்தகைய நேரங்களில், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் வெளியே செல்ல வேண்டாமென உணர்த்துவதற்கு அந்த எச்சரிக்கை முறை கைகொடுக்கும்.

பருவநிலை மாற்றம் மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை கணினி பாவனைச் சூழல்களின் உதவியோடு ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, பக்கவாதம், மாரடைப்புச் சம்பவங்களின் எண்ணிக்கையில் வெப்பநிலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கத்தை, பாவனைச் சூழலில் அவர்கள் மதிப்பிடுவர்.

காற்றுத் தூய்மைக்கேட்டுக்கும் அதிகரிக்கும் வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பு குறித்துக் கவலை தெரிவிக்கும் ஆய்வாளர்கள், நீண்டகால அடிப்படையில் சுவாசக் கோளாறுகளில் இவற்றால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறினர்.

நீண்டகால அடிப்படையில், வெப்ப அலைகளின்போது பொதுப் பூங்காக்களை மூடுதல், வீட்டிற்குள் வெப்பநிலையைக் குறைக்கும் வகையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை மறுவடிவமைத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் குழு கவனம் செலுத்தும்.

டெங்கி, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களில் சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மற்றோர் ஆய்வுக்குழு மதிப்பிடுகிறது.

பாவனைச் சூழல்களைப் பயன்படுத்தும் இந்த ஆய்வு, இத்தகைய நோய்களால் ஏற்படக்கூடிய பொருளியல் பாதிப்புகளையும் மதிப்பிடும்.

மிதமான வெப்பநிலை நிலவும் கூடுதலான நாடுகளுக்கு இந்த நோய்கள் பரவக்கூடும். சிங்கப்பூரில் இலையுதிர் காலமாக இருந்தாலும் மற்றொரு நாட்டில் கோடைக்காலமாக இருந்தால் அங்கிருந்து வரும் சுற்றுப்பயணிகள் மூலம் சிங்கப்பூரில் இத்தகைய நோய்கள் பரவக்கூடும் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்